கர்நாடகாவில் இருந்து நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் குடவாசல் அருகே பரபரப்பு
குடவாசல் அருகே கர்நாடகாவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடவாசல்,
வெளி மாநிலங்களில் அறுவடையாகும் நெல் வியாபாரிகள் மூலம் தமிழகத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் நஷ்டம் ஏற்படுவதாகவும் தமிழக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது கர்நாடக மாநிலத்தில் நெல்லுக்கு குறைவான விலை கிடைப்பதால், அந்த மாநில விவசாயிகள் அங்கு அறுவடையாகும் நெல்லை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அகரஓகை கிராமத்தில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், அந்த லாரியை மறித்து அதன் டிரைவரிடம் நெல் மூட்டைகளை எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வரப்படுவதும், அவற்றை குடவாசல் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த லாரி, தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சிறைபிடிக்கப்பட்ட லாரியில் 27 டன் நெல் மூட்டைகள் இருந்தன. குடவாசல் பகுதியில் அறுவடை பணிகள் தொடங்காத நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை குடவாசல் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய கொண்டு வந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே புளிச்சகாடி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மைசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தது யார்? என்பது பற்றி குடவாசல் தாசில்தார் பிருத்விராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.