கும்பகோணத்தில் கொத்தனார் வெட்டிக்கொலை 6 பேர் கைது


கும்பகோணத்தில் கொத்தனார் வெட்டிக்கொலை 6 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2019 11:00 PM GMT (Updated: 14 Jan 2019 7:46 PM GMT)

கும்பகோணத்தில், கொத்தனார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாதுளம்பேட்டை தெரு ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் சக்திவேல்(வயது 23). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், அதே பகுதியில் உள்ள மோரிவாய்க்கால் தொட்டியில் தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சக்திவேலை வெட்டிக்கொன்றது யார்? அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், சக்திவேலுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் சக்திவேலின் நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், சக்திவேலை வெட்டிக்கொன்று உடலை மோரி வாய்க்காலில் உள்ள சாக்கடை தொட்டியில் வீசிவிட்டோம் என கூறினர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக இந்த தகவலை கும்பகோணம் மேற்கு போலீசாரிடம் கூறினார். மேலும் தன்னை மர்ம நபர்கள் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணையும் அவர் போலீசாரிடம் கொடுத்தார். இந்த செல்போன் எண் மூலம் போலீசார் கொலையாளிகள் குறித்து துப்பு துலக்கினர்.

இதில் கொலையாளிகள் குறித்து விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்தி(29), ஆல்பாகுமார் மகன் தமிழ்செல்வன்(24), ரவி மகன் மணிமாறன் என்ற காளிதாஸ்(22), ராஜாராம் காலனியை சேர்ந்த ரவி மகன் விஜய் என்ற ஊத்துவிஜய்(22), சுப்பிரமணி மகன் ராஜகுரு(25), சிலம்பரசன் மகன் பரணிதரன்(24) ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர்களுக்கு சக்திவேல் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்தி, தமிழ்ச்செல்வன், மணிமாறன் என்ற காளிதாஸ், விஜய் என்ற ஊத்து விஜய், ராஜகுரு, பரணிதரன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் சக்திவேல் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story