பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு


பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 7:47 PM GMT)

பொதுமக்களின் அனைத்து கோரிக்கை கை-யும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சமத்துவபுரம் அருகே ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துணை மின்நிலையத்தின் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய துணை மின்நிலையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மின் இணைப்புகளில் ஏற்படும் மின் அழுத்த குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சரி செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தின் மூலம் குறைந்த மின் அழுத்த குறைபாடுகள் சரி செய்யப்படும்.

மேலும் இங்கிருந்து அன்னவாசல், காலாடிப்பட்டி, வெள்ளாஞ்சார், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், கீழக்குறிச்சி, கிடாரம்பட்டி, அரக்குடிப்பட்டி, மதியநல்லூர், சித்தன்னவாசல், ஆரியூர், வள்ளவாரி ஆகிய கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகள், 2 ஆயிரத்து 500 விவசாய மின் இணைப்புகள், 3 ஆயிரத்து 200 தெரு விளக்குகள், 350 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மின் இணைப்புகள் போன்றவற்றுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு தொடர்ந்து சீரான மின் வினியோகம் வழங்குவது உறுதி செய்யப்படும். இதேபோல அன்னவாசல் பகுதி பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கஜா புயலின்போது மின் சீரமைப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மின்சாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் மேற்பார்வை பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர்கள் மயில்வாகனன், அசோக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story