மருத்துவ சான்றுக்கான நிபந்தனையை தளர்த்த கோரி மணப்பாறையில் ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர்கள் ஊர்வலம்


மருத்துவ சான்றுக்கான நிபந்தனையை தளர்த்த கோரி மணப்பாறையில் ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:30 PM GMT (Updated: 14 Jan 2019 8:22 PM GMT)

மணப்பாறையில், ஜல்லிக்கட்டு காளைக்கு ஒவ்வொரு முறையும் மருத்துவ சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி ஜல்லிக்கட்டு காளையுடன், உரிமையாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆவாரங்காடு, பொத்தமேட்டுப்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளை கடைபிடித்தால் மட்டுமே போட்டிக்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. இதேபோல் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைக்கு கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து, அதற்கான மருத்துவ சான்றிதழ் பெற்றால் மட்டுமே காளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும். கடந்த ஆண்டைப் பொறுத்தவரை ஒரு முறை கால்நடை மருத்துவரிடம் மருத்துவச்சான்று பெற்று, அதனை போட்டிக்கு பதிவு செய்ய காண்பித்த பின்னர், மருத்துவ சான்றை மீண்டும் காளை உரிமையாளர்களே வாங்கிச் கொள்வார்கள். பின்னர் ஜல்லிக்கட்டு திடலிலும் காளைக்கு பரிசோதனை செய்து போட்டிக்கு அனுமதிக்கப்படும்.

ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு முறையும் காளைக்கு மருத்துவ சான்றிதழ் வாங்க வேண்டும் என்று கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளைகள் வைத்துள்ள உரிமையாளர்கள் நேற்று காலை மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகே திரண்டனர். அப்போது ஒரு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்து, அதனுடன் மாரியம்மன் கோவிலில் இருந்து கோரிக்கை மனு அளிக்க ஊர்வலமாக கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம், கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேலும் மருத்துவரிடம் அவர்கள் கூறுகையில், காளைக்கு பரிசோதனை செய்து மருத்துவ சான்று பெற்றாலும் கூட, ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பு காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் காளை பங்கேற்க அனுமதிக்கப் படுகிறது. ஆனால் தற்போது ஒவ்வொரு முறையும் சான்றிதழ் வாங்கச் சொல்வதால், கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க காளையை கொண்டு வர முடியாத நிலை ஏற்படும். ஆகவே ஒவ்வொரு முறையும் காளைக்கு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும், என்று கூறினர்.

இதையடுத்து அவர்களிடம் கால்நடை மருத்துவர் பேச்சுவார்த்தை நடத்தி, உயரதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஊர்வலத்தில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Next Story