சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்


சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:22 PM GMT (Updated: 14 Jan 2019 10:22 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை,

இந்திய செஞ்சிலுவை சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சார்லஸ் பிரேம்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஐ.ஏ.ஆர்.எப் தேசிய துணை தலைவர் சிதம்பரம், அந்தோணி குரூஸ் அடிகளார், ஹசன், துணை தலைவர் மரியசூசை, பொருளாளர் பிரேமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) சுகபுத்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடந்தது.

நெல்லை சந்திப்பு ஷிபா ஆஸ்பத்திரியில், நிர்வாக இயக்குனர் முகம்மது ஷாபி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். மருத்துவ இயக்குனர் முகம்மது அரபாத் வரவேற்றார். விழாவில் டாக்டர்கள் கஜலட்சுமி, முருகன், வெங்கடேசன், சுபிக்‌ஷா, மார்க்கெட்டிங் மேலாளர் சுதர்சன் ஐசக், குவாலிட்டி மேலாளர் ஈகா வினோலினா, சிதம்பரம், ஆபரேசன் மேலாளர் வாசுதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை ஊழியர்கள், பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

நெல்லை முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளிக்கூடமும், தனியார் தொலைக்காட்சியும் இணைந்து உணவு திருவிழா மற்றும் கோலப் போட்டியை நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தொலைக் காட்சி நிர்வாக இயக்குனர் ஆறுமுகநயினார் பரிசு வழங்கினார். விழாவில் பள்ளி தாளாளர் ஜெயந்தி, முதல்வர் ஆனந்தி ராஜேந்திரன், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் ராபின், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜா ஜீவநேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டை சாந்திநகர் மாம் என் கிட்ஸ் மழலையர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் பாரம்பரிய உடையணிந்து வந்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புளியங்குடி அன்னை மீனாட்சி பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சிதம்பரம், செயலாளர் முருகன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி இயக்குனர் ஹரிகரசுதன், பள்ளி முதல்வர் அமல் ஜெ.எரோனிமஸ் ஆகியோர் பரிசு வழங்கினர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அட்லின் ஜெபா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் ராஜமாணிக்கம், தனி தாசில்தார் மரகதநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ராமசாமி வரவேற்றார். விழாவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார். விழாவில் சேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், முன்னாள் நகரசபை தலைவர் ரஹீம், ஜெ.பி.கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி, ரோட்டரி சங்க தலைவர் திருமலைக்குமார், தலைமை ஆசிரியர் சுடலை, வாசகர் வட்ட செயலாளர் செண்பககுற்றாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை விஸ்வநாதபுரம் ட்ரஸர் ஐலண்ட் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் முகமது பண்ணையார் தலைமை தாங்கினார். தாளாளர் ஷேக் செய்யது அலி முன்னிலை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

ஆழ்வார்குறிச்சி குட்செப்பேடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி சர்தாதேவி வரவேற்றார். விழாவில் பள்ளி தாளாளர் ஆண்டனி பாபு, ஜோஸ்பின் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் தர்ஷினிகா, இலக்கியா தேவி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை மீராள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் அந்தோணி சாமி தலைமை தாங்கினார். சேவியர் கல்லூரி கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் ஆசியுரை வழங்கினார். மாணவர் ஏசையா வரவேற்று பேசினார். மாணவர் ராமச்சந்திரன் பொங்கல் கவிதை படித்தார். சுந்தர ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் பிரிட்டோ வாழ்த்தி பேசினார். பொங்கல் பண்டிகையையொட்டி மாணவிகளுக்கு கோலப்போட்டி நடந்தது. மாணவி ஹேமமாலினி நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சாம் சுந்தர் ராஜா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் பாரம்பரிய மிக்க மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. விழாவில் தொழில் அதிபர்கள் கமாலுதீன், சத்யானந்த், இயக்குனர் ரவிக்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அகஸ்டின் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தார். சுந்தர ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டையில் உள்ள சாராள் தக்கர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி முதல்வர் ஹேமாராஜம் தலைமை தாங்கினார். ஆசிரியை சரோஜா பொங்கல் பண்டிகையின் சிறப்பு பற்றி கூறினர். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story