தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jan 2019 11:17 PM GMT (Updated: 14 Jan 2019 11:17 PM GMT)

தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தா.பேட்டை,

திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஊரக்கரை கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி குடிநீர் மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த பல மாதங்களாக ஊரக்கரை கிராமத்தில் குடிநீர் சரியாக பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு துறையூர் - நாமக்கல் மெயின்ரோட்டில் ஊரக்கரை பஸ் நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஊரக்கரை கிராமத்தில் பல இடங்களில் வீடுகளில் குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் ஏற்றப்படுகிறது. குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்க வேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் பெரியசாமி, மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி முத்துசெல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story