நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி திரளான பக்தர்கள் தரிசனம்


நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி  திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 16 Jan 2019 10:00 PM GMT (Updated: 16 Jan 2019 2:24 PM GMT)

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை, 

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழா

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4–ம் நாளான நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி வேதபட்டர்கள் வீதி, வீதியாக சென்று நெல் சேகரித்தனர். அந்த நெல், நெல்லையப்பர் கோவில் சன்னதி முன்பு வைக்கப்பட்டது. அங்கு பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் அதாவது நெல் இருந்த இடத்தை சுற்றி மழை பெய்ததற்கு அடையாளமாக தண்ணீர் தெளிக்கப்பட்டது. நெல் இருந்த மேடையில் மட்டும் தண்ணீர் படாமல் இருந்தது. அப்போது அந்த நெல் மேடைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

திரளான பக்தர்கள்

இதைத்தொடர்ந்து நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் ரி‌ஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வருதல் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, பேஸ்கார் முருகேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புராண வரலாறு

நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் பட்டர்கள் வீடு, வீடாகச் சென்று நெல் யாசகமாக பெற்றனர். அந்த நெல்லை, நெல்லையப்பர் கோவில் முன்பு காய வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென்று பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இதனால் பதறிய பட்டர்கள் தாங்கள் காயவைத்த நெல் மழையில் நனைந்து தங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய்விடுமோ என்ற மனவேதனையுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. தங்கள் காயவைத்த பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அதை சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக புராண வரலாறுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நினைவுபடுத்தும் பகுதியில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story