மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் + "||" + Sea fury in Kanyakumari: Canceling boat traffic to Thiruvalluvar statue Tourists are disappointed

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

அதை தொடர்ந்து கடலின் நடுவே உள்ள பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து ரசித்து செல்வது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண முக்கடல் சங்கம கடற்கரையிலும், காட்சி கோபுரத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு தினமும் 3 மணி நேரம் படகு போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. படகில் பயணம் செய்வதற்காக அதிகாலை முதலே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் 10.30 மணியளவில் திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்து பாறைகளில் மோதி சிதறியது. உடனே, விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற பயணிகள் அவசரமாக படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். அதை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை செய்ய ஆர்வத்துடன் படகுத்துறையில் காத்திருந்தனர். இதேபோல், சுற்றுலா பயணிகளும் திருவள்ளுவர் சிலையை காண காத்திருந்தனர். ஆனால், சீற்றத்தின் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

பகல் 12 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து அங்கு காத்திருந்த தமிழ் அறிஞர்கள் தனிப்படகில் திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து நடைபெற்றது. சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகு போக்குவரத்து நடைபெறவில்லை.


ஆசிரியரின் தேர்வுகள்...