நாசரேத் அருகே பரிதாபம் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவன் சாவு
நாசரேத் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்தான்.
மெஞ்ஞானபுரம்,
நாசரேத் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்தான்.
10–ம் வகுப்பு மாணவன்நாசரேத் அருகே பிடாநேரி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் நாசரேத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் அருண்குமார் (வயது 15) என்ற மகன் மற்றும் 3 மகள்கள்.
அருண்குமார், நாசரேத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று காலையில் பக்கத்து ஊரான டி.கே.சி. நகரில் உள்ள கல்குவாரி தண்ணீரில் குளிக்க சென்றான். அப்போது அருண்குமார் எதிர்பாராதவிதமாக கல்குவாரி தண்ணீரின் ஆழமான பகுதியில் மூழ்கினான்.
போலீசார் விசாரணைநீண்ட நேரமாகியும் அருண்குமார் வீட்டுக்கு திரும்பி வராததால், அவரைத் தேடி குடும்பத்தினர் சென்றனர். அப்போது அருண்குமார் கல்குவாரி தண்ணீரில் மூழ்கியது தெரிய வந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம் மற்றும் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கல்குவாரி தண்ணீரில் இறங்கி தேடினர்.
கல்குவாரி தண்ணீரில் மூழ்கி இறந்த அருண்குமாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருண்குமாரின் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.