திருவள்ளுவர் தினத்தில் 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு டீ விற்கும் முதியவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்


திருவள்ளுவர் தினத்தில் 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு டீ விற்கும் முதியவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Jan 2019 4:15 AM IST (Updated: 16 Jan 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

பேராவூரணியில் திருவள்ளுவர் தினத்தில் 20 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் தனது கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார். இவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார்(வயது70). இவர் பேராவூரணி பஸ் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட இவர், ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தில் தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.

நாள்தோறும் இவருடைய கடையின் முன்பு உள்ள கரும்பலகையில் ஒரு திருக்குறளும், அதன் பொருளும் எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பதற்காகவே பலர் இவருடைய கடைக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.

நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் தங்கவேலனாரின் கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை நடந்தது. உலக பொது மறையாக திகழும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய் விலையில் டீ வழங்கி வருகிறேன். இன்று (நேற்று) மட்டும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு டீ விற்பனை செய்தேன். தமிழக அரசு இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால், சில்வர் குவளையில் டீ வழங்கினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story