கோடநாடு விவகாரம் குறித்து ஆராய வேண்டும் பொள்ளாச்சியில் கமல்ஹாசன் பேட்டி


கோடநாடு விவகாரம் குறித்து ஆராய வேண்டும் பொள்ளாச்சியில் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 4:59 PM GMT)

கோடநாடு விவகாரம் குறித்து ஆராய வேண்டும் என்று பொள்ளாச்சியில் கமல்ஹாசன் கூறினார்.

பொள்ளாச்சி,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. விழாவுக்கு மாநில துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு கட்சி கொடி ஏற்றப்பட்டது.

அதன் பிறகு அங்கு கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

3 வயது முதல் 60 வருடங்களாக நான் குழந்தையாக இருந்தபோது எப்படி என்னை தோளில் வைத்து கொண்டாடினார்களோ அதே உற்சாகத்துடன் தோள் கொடுத்து உயர்த்திய தமிழக மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை எனது தோளை அவர்களுக்கு வழங்குவதுதான். அந்த கடமையை தான் நான் இப்போது செய்து வருகிறேன்.

மக்களுக்காக சேவை செய்ய வந்தேன் என்பது பெரிய வார்த்தை. நான் எனது கடமையை செய்ய வந்து உள்ளேன். இந்த கடமை எனக்கு மட்டும் அல்ல. எல்லா தோழர்களுக்கும் உண்டு. அதை நினைவுபடுத்தவும் நான் வந்துள்ளேன்.

கோடநாடு சம்பவம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு ஆராயப்பட வேண்டும். தேவைப்பட்டால் மேலிடத்தில் கூறி அதை ஆராய வேண்டும். கோடநாடு, துரோகத்தின் சின்னமாக மாறி உள்ளது. மக்களுக்கும், அவர்கள் தங்களுக்கும் செய்து கொண்ட துரோகத்தின் சின்னமாகதான் இருக்கிறது.

ஏதோ தேர்தல் நெருங்குவதால் அவசரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அப்படி என்றால் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் என்ன பதில் கூறுகிறார். இது அவசரத்தில் கூறிய குற்றச்சாட்டு என்று சொல்லக்கூடியது அல்ல. இது தேர்தலுக்காக கூறியது அல்ல. பல ஆண்டுகாலமாக மக்களிடம் எழுந்த குற்றச்சாட்டுதான் இது. எனவே இந்த வி‌ஷயத்தில் அதிகாரிகள் கண்டிப்பாக ஆராய வேண்டும்.

பொதுவாக அனைத்து கட்சிகளின் தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருக்கும். இதனால் ஏழை–எளிய மக்களால் அடிக்கடி சென்னை செல்ல முடியாது. மக்கள்தான் கட்சியை தேடி செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். 100 கி.மீ.க்குள் கட்சி தலைமை அலுவலகம் இருந்தால் எளிதாக சென்று தங்களது கருத்துக்களை கூற முடியும். அதற்கு முதல்படிதான் இது. நாங்கள் மக்களை தேடி செல்வதால், மக்கள் எங்களை எளிதாக சந்தித்து அவர்களின் குறைகளை எடுத்துக்கூற முடியும்.

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். நான் தனியாக முடிவு எடுக்க முடியாது. கட்சியில் எங்களுக்கு அனுசரணையான சூழல் எல்லாவற்றையும் பார்த்து முடிவு எடுக்கப்படும். இது எங்களுக்காக மட்டும் எடுக்கக்கூடிய முடிவு அல்ல. தமிழகத்துக்காகவும் சேர்த்து எடுக்கக்கூடிய முடிவு. தமிழக அரசியலில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம். ஏனென்றால் டெல்லியை நீக்கிவிட்டு தனியாக அரசியல் செய்ய முடியாது. நான் இந்தியன், முதலில் தமிழன்.

மக்கள் அவர்களின் பிரச்சினையை எங்களிடம் முன்வைக்கிறார்கள். நாங்கள் பிரச்சினையை அவர்களிடத்தில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை, ஏழைகளின் திண்டாட்டம் என்று மக்களுக்கு அனைத்து பிரச்சினைகளும் தெரியும். அதை போக்க என்ன வழி என்பதை நாங்கள் வல்லுனர்கள், சாதாரண மக்களிடம் கேட்டு தெரிந்து வந்து கொண்டு இருக்கிறோம். கொள்கைக்கும், திட்டத்துக்கும் இடையே பெரிய குழப்பம் நமக்குள் இருக்கிறது. கொள்கை மாறாது. அந்த கொள்கைகளை நிறைவேற்ற திட்டங்கள் தீட்டுவோம். அந்த திட்டம் சரியில்லை என்றால் அது மாறும். கொள்கைக்காகதான் திட்டங்கள். நீர்நிலை ஆதாரங்களை காக்க, பெண்களின் நலன், ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது. அதுபோன்று கல்வி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும் கடமை உள்ளது. இவைகளை போக்க வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

மக்களுக்கு இலவசமாக கொடுப்பது என்பது, தனது பாக்கெட்டில் இருந்து கொடுப்பது இல்லை. இலவசம் என்பது நாம் சம்பாதித்து கொடுப்பதுதான். அடிப்படை கல்வி, மருத்துவத்தை இலவசமாக கொடுக்க வேண்டும். அதை செய்யாமல் குறுக்கு வழியில் எதையும் செய்ய முடியாது. தற்போது அரசு கொடுக்கும் இலவச கல்வி சரியாக இல்லை.

தமிழகம் முன்னேற வேண்டும், ஊழலுக்கு விடை கொடுக்க வேண்டும் என்கிற ஒத்த கருத்துடையவர்களிடம் தான் கூட்டணி வைப்போம். மேலும் இடஒதுக்கீடு என்பது ஒரு காரணத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. அந்த காரணம் நீங்கிய பின்னர் இடஒதுக்கீட்டை நீக்கலாம். தற்போது அந்த காரணம் நீங்கவில்லை. இடஒதுக்கீட்டில் எவ்வித குந்தகம் இல்லாமல் உள்ஒதுக்கீடு என்பது இருக்க வேண்டும். இந்த பூமியை சிலர் ஆன்மிக பூமி, விவசாய பூமி, பெரியார் மண் என்று கூறுகிறார்கள். இந்த மண் மூவருக்கும் சொந்தமானது என்பதுதான் எனது கருத்து.

ஓட்டுரிமையை பெறுவது எப்படி என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து செய்யும். நீங்களும் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். நடிகர் என்பது எனது தொழில், மக்களுக்கு பணி செய்வது எனது கடமை. இந்த பணி தொடரும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


Next Story