மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு + "||" + Electricity struck college student death

மின்கம்பத்தை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு

மின்கம்பத்தை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு
நாகையில் மின்கம்பத்தை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சேதமடைந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டன. ஒரு சில கிராமங்களில் இன்னும் மின்வினியோகம் முழுமையாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் பொங்கல் அன்று வடக்குபொய்கைநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்லப்பன் (வயது45), ராமலிங்கம் (35), காத்தலிங்கம், வீரமணி ஆகியோர் அப்பகுதியில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சரவணன் (20) என்பவரையும் உதவிக்காக அவர்கள் அழைத்தனர்.

இவர்கள் மின்கம்பத்தை நிமிர்த்திய போது, அருகில் உள்ள மின்கம்பியில் மின்கம்பம் பட்டு ராமலிங்கம், செல்லப்பன், சரவணன் ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். சரவணன் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் நிர்வாகம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமலிங்கம், செல்லப்பன் ஆகிய 2 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மின்வாரியத்தை கண்டித்து நாகை அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளச்செல்வன் தலைமையில், சரவணனின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை