ராஜபாளையத்தில் பரிதாபம் பொங்கலை கொண்டாட வந்த பேராசிரியர் கார் மோதி பலி
ராஜபாளையத்தில் பொங்கலை கொண்டாட சென்னையில் இருந்து வந்த பேராசிரியர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சீனி. இவரது மகன் கிருஷ்ணராஜ்(வயது28). இவர் சென்னையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். பொங்கல் பண்டிகையை கொண்டாட இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பொங்கல் நாளில் காலையில் தனது நண்பரும் என்ஜினீயருமான பிரதீப் என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு முறம்பில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கோதைநாச்சியார்புரம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரதீப் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுந்தரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்தனர். பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த பேராசிரியர் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.