தாராபுரத்தில் இறந்த தொழிலாளியின் உடலை இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது


தாராபுரத்தில் இறந்த தொழிலாளியின் உடலை இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 16 Jan 2019 10:15 PM GMT (Updated: 16 Jan 2019 7:30 PM GMT)

தாராபுரத்தில் இறந்த தொழிலாளியின் உடலை இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தாராபுரம்,

தாராபுரம் ராம்நகரை சேர்ந்தவர் அய்யாவு (வயது 65). கூலித் தொழிலாளி. இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவரது உறவினர்கள் அய்யாவுடைய உடலை அடக்கம் செய்வதற்காக, ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யாவுடைய உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு, அவரது உறவினர்கள் சில சடங்குகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் அங்கு வந்து பிணத்தை அந்த பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இறந்தவரின் உடலை புதைக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே அங்கு தகராறு ஏற்பட்டது.

இந்த பிரச்சினை குறித்து ராம்நகரை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

ராம்நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு, அதே பகுதியில் தனியார் கல்லூரிக்கு அருகே இடுகாட்டிற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் காலங்காலமாக இறந்தவர்களின் உடல்களை புதைத்துக் கொண்டிருந்தோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அலங்கியம் பிரிவிலிருந்து ஒட்டன்சத்திரம் சாலைவரை புறவழிச்சாலையை நீட்டிப்பு செய்தது. புறவழிச்சாலையானது ராம்நகர் வழியாக கொண்டு செல்லப்பட்டதால், சாலை அமைப்பதற்காக இடுகாட்டு நிலத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி கொண்டது.

அதன் பிறகு இடுகாட்டு இல்லாமல் சிரமப்பட்டு வந்த எங்களுக்கு, வருவாய்த்துறையினர் ஒட்டன்சத்திரம் சாலையில் வண்டிப்பாதை பிரிவுக்கு அருகே, சாலையோரமாக இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 செண்ட் நிலத்தை இடுகாட்டிற்காக ஒதுக்கினர். அதன் பிறகு இறந்தவர்களின் உடல்களை இந்த இடுகாட்டில்தான் புதைத்து வருகிறோம். இந்த நிலையில் இடுகாட்டு அமைந்துள்ள இடத்திற்கு அருகே, தனியாருக்கு சொந்தமான நிலங்கள் நிறைய உள்ளது. இந்த நிலத்திற்கு அருகே இடுகாடு அமைந்துவிட்டதால், தனியாருக்கு சொந்தமான நிலத்தின் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நிலத்தின் உரிமையாளர், யாருடைய அனுமதியும் பெறாமல், இடுகாட்டில் இருந்த கல்லறைகளை இடித்துவிட்டு, அந்த நிலத்தை சமப்படுத்தி விட்டார். அதன் பிறகு நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்து, போராடி இடுகாட்டை மீட்டு, அதே இடத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வந்தோம்.

இந்த நிலையில்தான் அய்யாவுடைய உடலை புதைப்பதற்காக சென்றபோது மீண்டும் அதே நபர் தனது உறவினர்களோடு வந்து, அவருடைய உடலை புதைக்கவிடாமல் தடுத்து தகராறு செய்தார். நாங்கள் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடுகாட்டு நிலத்தில் தான் பிணங்களை புதைக்கிறோம். இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் சரியான தீர்வு ஏற்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் நீண்ட நேரமாக இடுகாட்டில் அய்யாவுடைய பிணத்தை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டதால், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அய்யாவுடைய உடலை சாலையில் வைத்து சாலை மறியல் நடத்த முடிவு செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த தாசில்தார் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலை மறியலை தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, இடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அய்யாவுடைய உடலை புதைக்க ஏற்பாடு செய்தனர். அதன் பிறகு அய்யாவுடைய உடலுக்கு அவரது உறவினர்கள் சடங்குகளை நடத்தி, உடலை புதைத்தனர். இடுகாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக சுமார் 2 மணி நேரம் அய்யாவுடைய உடல் வைக்கப்பட்டு இருந்தது.


Next Story