மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: பெற்றோர் கண் முன்னே 11 மாத குழந்தை பலி 3 பேர் படுகாயம்
மடத்துக்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெற்றோர் கண் முன்னே 11 மாத குழந்தை பலியானது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அருகே உள்ள மெட்ராத்தி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 23). கார் டிரைவர். இவருடைய மனைவி சண்முகத்தாய் (21). இவர்களுடைய மகன் வாசுதேவன் (3). மேலும் இவர்களுக்கு சூர்யா என்ற 11 மாத குழந்தையும் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் மணிவாசகம் தனது குடும்பத்துடன் உடுமலை சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மணிவாசகம் ஓட்டினார். பின் இருக்கையில் அவருடைய மனைவி சண்முகத்தாய், தனது 11 வயது குழந்தையை கையில் வைத்து இருந்தார். வாசுதேவனுக்கும், சண்முகத்தாய்க்கும் நடுவில் குழந்தை சூர்யா அமர்ந்து இருந்தான்.
இவர்களுடைய மோட்டார் சைக்கிள் தாராபுரம்–உடுமலை ரோடு தாமரைபாடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரை வினோத் (35) என்பவர் ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் மணிவாசகம், சண்முகத்தாய், வாசுதேவன் மற்றும் சூர்யா ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 மாத குழந்தை சூர்யா இறந்தது. மற்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பெற்றோர் கண் முன்னே 11 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.