ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது


ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2019 4:45 AM IST (Updated: 17 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அருகில் படுத்து தூங்கிய அவரது மகளும் கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக குடுகுடுப்பைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வந்த நரிக்குறவர் ஒருவர், தனது 5 வயது மகனுடன் ஊர் ஊராக பாசிமணி, கம்மல் வியாபாரத்துக்கு சென்று விட்டார். வீட்டில் அவருடைய 22 வயது மனைவியும், 3 வயது மகளும் இருந்தனர்.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் வீட்டில் இருந்து அந்த பெண் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு தாய்–மகள் இருவரும் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி துணை போலீஸ் கமி‌ஷனர் ஈஸ்வரன், உதவி கமி‌ஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பாரதி ஆகியோர் கொலையான தாய்–மகள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

அப்போது அங்கு கூடி இருந்த இளம்பெண்ணின் உறவினர்கள், உடல்களை மீட்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து ஆவடி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு ஓடிச்சென்று ஆவடி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அங்கு சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து வைத்து இருந்த வீரக்குமார் (வயது 21) என்பவரை பார்த்து குரைத்து விட்டு, அவரை கவ்விப்பிடித்தது.

வீரக்குமாரின் கை, கால்களில் லேசான ரத்த கறை படிந்து இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் காட்பாடியை சேர்ந்த வீரக்குமார், ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி குடு, குடுப்பை அடித்து குறி சொல்லி வந்ததும், தாய்–மகள் இருவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததும், முன்னதாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இளம்பெண்ணை கற்பழித்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:–

பொங்கல் பண்டிகை என்பதால் இளம்பெண்ணின் கணவர் மற்றும் மகன் இருவரும் வியாபாரத்துக்கு வெளியூர் சென்று விட்டனர். வீட்டில் அந்த பெண், தனது மகளுடன் இருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்குள்ள உறவினர் வீட்டுக்கு வந்த வீரக்குமார், இரவு நேரங்களில் குடித்துவிட்டு தனியாக இருந்த பெண்ணிடம் அடிக்கடி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்ட வீரக்குமார், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு தனது மகளுடன் அந்த பெண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

இளம்பெண் சத்தம் போடாமல் இருக்க வீட்டுக்கு வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து அவரது தலையில் போட்டார். இதில் அந்த பெண், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அந்த கல் அருகில் படுத்திருந்த அவருடைய மகள் முகத்திலும் விழுந்ததால் அவள், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தாள்.

பின்னர், வீரக்குமார் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை கற்பழித்தார். இதில் அந்த பெண்ணும் உயிரிழந்தார். பின்னர் வீட்டில் இருந்த தண்ணீரில் தனது உடலில் இருந்த ரத்தக்கறைகளை கழுவிக்கொண்டு ஒன்றும் தெரியாதது போல் வீரக்குமார் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

உடலில் உள்ள ரத்தக்கறையை கழுவும் போது கை, கால்களில் சில ரத்த துளிகள் அப்படியே இருந்துள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து வந்த அவரை மோப்ப நாய் சரியாக கவ்விப்பிடித்ததால் கொலையாளி யார்? என்பது உறுதியாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய்–மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story