கரூரில் 5½ டன் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது


கரூரில் 5½ டன் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2019 4:30 AM IST (Updated: 17 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5½ டன் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்.

கரூர்,

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சோதனைசாவடி அருகே கடந்த 14-ந்தேதி நள்ளிரவில் பரமத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, வேனில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த வேன் டிரைவர், திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 43) மற்றும் உடன் இருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலோ மாவட்டத்தை சேர்ந்த பாபுலால் (33) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், புகையிலை பொருட்களை அவர்கள் கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியிலுள்ள குடோன்களுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இது பற்றிய தகவலை, கரூர் மாவட்ட போலீஸ்துறையினருக்கு பரமத்தி போலீசார் தெரிவித்தனர். அதன் பேரில் கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை போலீசார் ராயனூர் பகுதிகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராயனூர் வெள்ள கவுண்டன் நகர், அண்ணா நகர், ஒத்தையூர் ஆகிய இடங்களில் தகர கொட்டகை மூலம் குடோன் அமைத்து மூட்டை, மூட்டையாகவும், பெட்டிகளில் அடைத்தும் டன் கணக்கில் குட்கா உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர் (தாந்தோன்றிமலை), செந்தில்குமார் (வாங்கல்), பிருத்விராஜ் (கரூர் நகரம்), சுரேஷ்குமார் (வெங்கமேடு) உள்பட போலீசார் விரைந்து வந்து புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்ட குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்ட குடோன் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்த போது, கரூர் சின்னஆண்டாங்கோவில் ஏ.கே.சி.காலனியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தங்கராஜ் (51) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்ததாகவும், தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்ததை தன்னிடம் மறைத்து விட்டார் எனவும் தெரிவித்தார். இதையடுத்து கரூர் பழைய பைபாஸ் ரோடு உழவர் சந்தை அருகே மளிகைக்கடை நடத்தி வரும் தங்கராஜை பிடித்து விசாரித்ததில் அந்த நபர், தனது தொழில் பங்குதாரரான ராயனூர் கே.கே.நகரை சேர்ந்த செல்வராஜ் (46) என்பவருடன் சேர்ந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து ராயனூரில் பதுக்கி வைத்து கரூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

ராயனூர் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்பட புகையிலை பொருட்கள் 216 நைலான் சாக்கு மூட்டைகளிலும், 202 அட்டை பெட்டிகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 5½ டன் எடை கொண்ட இவற்றின் மதிப்பு சுமார் ரூ.41½ லட்சம் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கராஜ், செல்வராஜ் ஆகியோர் மீது தாந்தோன்றிமலை போலீசார் தனிதனியாக 3 வழக்குகள் பதிவு செய்தனர். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் பதுக்கி விற்றல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதே போல், வேன் டிரைவர் பாலசுப்பிரமணியை நாமக்கல் மாவட்ட போலீசார் கைது செய்து, வெளிமாவட்டங்களில் வேறு எங்காவது புகையிலை பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டன் கணக்கில் குட்கா உள்பட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது உணவுபாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story