உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்


உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Jan 2019 4:30 AM IST (Updated: 17 Jan 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சை கோவையை சேர்ந்த டிரைவர் நாகராஜ் ஓட்டினார். பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த பஸ் நேற்று அதிகாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், தறிகெட்டு ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினர்.

இதில் சென்னை மறை மலைநகரை சேர்ந்த ஆகாஷ் (வயது 31), கோவையை சேர்ந்த வெங்கடேஷ் (25), வைஷ்ணவி (22), திருப்பூரை சேர்ந்த ஐஸ்வர்யா (26), ஈரோட்டை சேர்ந்த பிரதீப்குமார் (35), சென்னையை சேர்ந்த சுபாஷினி (25) உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் சுபாஷினி, வெங்கடேஷ், பிரதீப்குமார் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story