கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய பெருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது


கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய பெருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 17 Jan 2019 4:45 AM IST (Updated: 17 Jan 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள கோணான்குப்பத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 23-ந் தேதி ஆடம்பர தேர்பவனி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அன்று மாலை கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு, கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் பெருவிழா கொடியேற்றப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித மாதா கெபி முன்பு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை திருப்பலி, சிலுவை பாதை, தேர்பவனி மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) காலை 7.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற இருக்கிறது.

விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இங்கு வரும் மக்களுக்காக குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை அருள்தாஸ் செய்து வருகிறார்.


Next Story