பென்னிகுவிக் பிறந்தநாள் விழா - பொங்கல் வைத்து பொதுமக்கள் கொண்டாட்டம்


பென்னிகுவிக் பிறந்தநாள் விழா - பொங்கல் வைத்து பொதுமக்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 10:37 PM GMT)

தேனி மாவட்டத்தில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா பொதுமக்களால் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

உத்தமபாளையம்,

தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. அணையை கட்டிய ஆங்கிலேய என்ஜினீயர் கர்னல் ஜான் பென்னி குவிக்கின் 178-வது பிறந்தநாளை போற்றும் வகையில் நேற்று முன்தினம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சுருளிப்பட்டியில் கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் பொங்கல் பானையுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அங்குள்ள முல்லைப்பெரியாற்று பாலத்தில் வைக்கப்பட்டு இருந்த பென்னிகுவிக் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பென்னிகுவிக் பிறந்தநாளை குறிக்கும் வகையில் ஒரே நேரத்தில் 178 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கூடலூர்

கூடலூர் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தில் காலையில் இருந்தே விவசாயிகளும், பல்வேறு கட்சியினரும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் குவிந்தனர். பென்னிகுவிக் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் நலச்சங்கம், ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், முல்லைப் பெரியாறு பாதுகாப்புக்குழு, ஒக்கலிகர் விவசாயிகள் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகளும், கூடலூர் மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து அவரது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். விவசாயிகள் பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கினர்.

பென்னிகுவிக் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுபோல அ.தி.மு.க., பா.ஜனதா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து பென்னிகுவிக் பிறந்த நாளை கொண்டாடினர். இதனால், பென்னிகுவிக் மணிமண்டபம் களைகட்டியது.

தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில், கூடலூர் லோயர்கேம்ப்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து லோயர்கேம்பில் வர்த்தகர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கம்பத்தில் சேதம் அடைந்துள்ள காந்தி சிலையை உடனே சீரமைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேக்கடியில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தை பராமரிக்க தேவையான ஆட்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலாளர் மனோகரன், மாவட்ட செயலாளர் முருகன், கம்பம் நகர தலைவர் அப்துல்பாசித் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோகிலாபுரத்தில் பென்னிகுவிக் பிறந்தநாளையொட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உத்தமபாளையத்தில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு விவசாயிகள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதே போல் தி.மு.க. சார்பில் தேனி மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர் பென்னிகுவிக் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செய்தனர்.

பாலார்பட்டி

உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டியில் பென்னிகுவிக்கின் பிறந்தநாள் விழா பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி பென்னிகுவிக்கின் உருவப்படம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஊரின் நடுவே உள்ள அவரது மணிமண்டபத்தின் முன்பு வைக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து பென்னிகுவிக் உருவப்படத்தின் முன்பு படையலிட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மேற்கு தொடர்ச்சி மலை சினிமா படத்தின் இயக்குனர் லெனின் பாரதி கலந்து கொண்டார். அவருக்கு கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.


Next Story