மும்பையில் 9 நாட்களாக நீடித்த வேலை நிறுத்தம் வாபஸ் : பெஸ்ட் பஸ்கள் ஓடத்தொடங்கின


மும்பையில் 9 நாட்களாக நீடித்த வேலை நிறுத்தம் வாபஸ் : பெஸ்ட் பஸ்கள் ஓடத்தொடங்கின
x
தினத்தந்தி 17 Jan 2019 4:11 AM IST (Updated: 17 Jan 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில் புறநகர் ரெயில் சேவைகளுக்கு அடுத்து பயணிகளுக்கான 2-வது மிகப்பெரிய போக்குவரத்து சேவையாக பெஸ்ட் பஸ் இருந்து வருகிறது.

மும்பை,

பெஸ்ட் பஸ்களில் நாளொன்றுக்கு 25 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ் சேவையை இயக்கி வரும் பெஸ்ட் குழுமம் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் தனி நிறுவனமாகவே செயல்படுகிறது.

பெஸ்ட் குழுமம் தனியாக தான் பட்ஜெட் தாக்கல் செய்கிறது. எனவே மாநகராட்சி ஊழியர்களுக்கு நிகரான சலுகைகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

பெஸ்ட் குழுமம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுப்பதற்கு சிரமத்தை சந்தித்து வருகிறது.

எனவே பெஸ்ட் குழும பட்ஜெட்டை மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் 32 ஆயிரம் ஊழியர்கள் கடந்த 7-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் நகரில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து போனது. நகரில் இயங்க வேண்டிய 3,200 பஸ்களும் டெப்போக்களில் முடங்கின.

பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலையிட்டும் தீர்வு காணப்படவில்லை. ஊழியர்கள் குடியிருப்புகளை காலி செய்யும்படி, மெஸ்மா சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு உயர் மட்ட கமிட்டியை அமைத்து பஸ் ஊழியர் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது.

மாநில தலைமை செயலாளர், மும்பை மாநகராட்சி கமிஷனர், பெஸ்ட் குழும பொது மேலாளர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தையும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியை தழுவியது.

இதையடுத்து ஐகோர்ட்டு, பஸ் ஊழியர்களின் அவசர கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி என்.எச். பாட்டீல் மற்றும் நீதிபதி என்.எம்.ஜாம்தார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு அமைத்த உயர்மட்ட கமிட்டி 10 படி நிலைகளில் பஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்து ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த ஊதிய உயர்வை வழங்க பெஸ்ட் நிர்வாகம் சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பெஸ்ட் பஸ் ஊழியர் யூனியனும் சம்மதித்தது.

அதே நேரத்தில் பெஸ்ட் பஸ் ஊழியர்களின் மற்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஓய்வு பெற்ற மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பெஸ்ட் பஸ் ஊழியர்கள் யூனியன் கோரிக்கை வைத்தது. இதை ஐகோர்ட்டு ஏற்றுக் கொண்டது. ஓய்வு பெற்ற நீதிபதி எப்.ஐ. ரேபெல்லா மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

அவர் 3 மாதத்திற்குள் பெஸ்ட் பஸ் ஊழியர்களின் கோரிக்கை குறித்து விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும் நீதிபதிகள் கூறுகையில், இந்த நிலை தொடர்ந்து இப்படியே நீடிக்க கூடாது. பெஸ்ட் குழுமம் மற்றும் மும்பை மாநகராட்சி பஸ் ஊழியர்கள் பிரச்சினையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறைந்த சம்பளத்தை கொண்டு வாழ்வது என்பது எளிதான காரியம் கிடையாது என்றனர்.

10 படி நிலைகளில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பெஸ்ட் பஸ் ஊழியர்கள் யூனியன் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

இது தொடர்பாக பெஸ்ட் பஸ் ஊழியர்கள் யூனியன் தலைவர் வடலா டெப்போவில், பஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் இதை அறிவித்தார். உடனடியாக பெஸ்ட் பஸ்கள் இயங்க தொடங்கும் எனவும் கூறினார்.

இதையடுத்து கடந்த 9 நாட்களாக நடந்து வந்த பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை விட்டு விட்டு பணிக்கு திரும்பினார்கள்.

இதையடுத்து, மாலை முதல் நகரில் மீண்டும் பெஸ்ட் பஸ்கள் இயங்க தொடங்கின. மும்பைவாசிகள் மகிழ்ச்சியுடன் பெஸ்ட் பஸ்களில் பயணம் செய்தனர்.

பெஸ்ட் பஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஐகோர்ட்டில், அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மும்பையில் 9 நாட்களாக நீடித்த பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதனால் நகரில் பஸ்கள் ஓடத்தொடங்கின.

Next Story