அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய 3 பேர் நியமனம் : மந்திரி பதவி வழங்கவும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு


அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய 3 பேர் நியமனம் : மந்திரி பதவி வழங்கவும் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 17 Jan 2019 4:36 AM IST (Updated: 17 Jan 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த மந்திரிகள் உள்பட 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிருப்தியாளர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சியை நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் காங்கிரசுக்கு 22 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், காங்கிரஸ் வசம் மந்திரிசபையில் இருந்த 22 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த ரமேஷ் ஜார்கிகோளி, சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கர் நீக்கப்பட்டனர். இதனால் அவர்கள் 2 பேரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தி அடைந்தனர். இவர்களில் சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கர் அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளார்.

அதுபோல, மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் அதிருப்தி அடைந்த ரமேஷ் ஜார்கிகோளி காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது அவர் மும்பையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல, மந்திரி பதவி கிடைக்காமல் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் தலைவர்கள் மீதும், கூட்டணி ஆட்சி மீதும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவ்வாறு அதிருப்தியில் இருந்துவரும் 5 எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளியுடன் மும்பையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தியில் உள்ள 12 எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதாலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்தார். குமர கிருபா விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியுள்ளார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவில் வேணுகோபாலை முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுப்பதற்காக அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். நீண்ட நேரம் வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தி விட்டு, அங்கிருந்து சித்தராமையா புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், குமர கிருபா விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள மேலிட பொறுப்பாளர் வேணு கோபாலை, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் மந்திரிகள் சந்தித்து பேசினார்கள். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும், அந்த எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவது தொடர்பாகவும் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த 3 பேரை நியமித்து முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, மும்பையில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசவும், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் மந்திரி டி.கே.சிவக்குமார் ஈடுபட பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

அதுபோல, பா.ஜனதாவுக்கு செல்ல திட்டமிட்டு அதிருப்தியில் இருந்து வரும் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பட்டீல், பி.சி.பட்டீல், கணேஷ், பீமா நாயக் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுமாறு மந்திரிகள் ஜமீர் அகமதுகான், மாநில செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இல்லாமல் உள்ள எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் தீவிரம் காட்டும்படி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கூட்டணி ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரையை முறியடிக்கவும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்தும், இதற்காக மூத்த மந்திரிகள் சிலரிடம் இருந்து பதவியை பறிக்கவும் வேணுகோபாலுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு மூத்த மந்திரிகளான கிருஷ்ண பைரேகவுடா, கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கவும், அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவும் நாளை (வெள்ளிக்கிழமை) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை விதானசவுதாவில் நடத்துவது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எங்கும் செல்லவில்லை. எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்து வந்துள்ள ஆதரவை திரும்ப பெற்றதால், கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களுடன் பேச உள்ளேன். குதிரை பேரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் இழுக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று தெரியவில்லை’ என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலர் காங்கிரஸ் தலைவர்களின் தொடர்பில் இல்லாமல் இருந்து வருகின்றனர். ரமேஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா உள்ளிட்டோர் மும்பையில் தங்கி உள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தவும், அவர்களை ஒன்றிணைக்கவும் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்ட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 3.30 மணியளவில் விதானசவுதாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story