கவர்னருக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடிதம் : கர்நாடக அரசுக்கு ஆதரவு வாபஸ் ‘ஆட்சிக்கு ஆபத்து இல்லை’ - குமாரசாமி


கவர்னருக்கு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடிதம் : கர்நாடக அரசுக்கு ஆதரவு வாபஸ் ‘ஆட்சிக்கு ஆபத்து இல்லை’ - குமாரசாமி
x
தினத்தந்தி 16 Jan 2019 11:11 PM GMT (Updated: 16 Jan 2019 11:11 PM GMT)

கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றனர். இதுதொடர்பாக அவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த நிலையில் ஆட்சிக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கர்நாடக சட்ட சபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியாக சந்தித்தன. தேர்தல் முடிவில் எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 104 இடங்களை கைப்பற்றிய பா.ஜனதா ஆட்சி அமைத்தது. ஆனால் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே அவர் ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. அதனை ெதாடர்ந்து 23-5-2018 அன்று காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும் காங்கிரஸ் சார்பில் துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றனர்.

கூட்டணி அரசுக்கு ஹாவேரி மாவட்டம் ராணி பென்னூர் தொகுதியில் இருந்து கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.சங்கரும், அதுபோல, கோலார் மாவட்டம் முல்பாகல் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நாகேசும் ஆதரவு அளித்தனர்.

கூட்டணி அரசில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 மந்திரி பதவிகளும் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் மந்திரி பதவியை பெறுவதில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது காங்கிரஸ் தலைமைக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி வந்தனர். இந்த சூழ்நிலையை பயன் படுத்தி பா.ஜனதா எதிர் தரப்பு எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுத்து திரைமறைவில் காய் நகர்த்தியதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது ரமேஷ் ஜார்கிகோளி, ஆர்.சங்கர்(கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சி) ஆகியோரின் மந்திரி பதவிகள் பறிக்கப்பட்டன.

மந்திரி பதவி பறிக்கப்பட்டதால் ரமேஷ் ஜார்கிகோளி கடும் அதிருப்தியில் உள்ளார். ஆனந்த்சிங், நாகேந்திரா மற்றும் ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மாயமாகிவிட்டனர். அவர்களை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் தலைவர்களின் தொடர்பில் இல்லாமல் இருந்து வருவதாகவும், பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர்(கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சசி்) மற்றும் நாகேஷ் திரும்ப பெற்றனர்.

இதுதொடர்பாக அவர்கள், 2 பேரும் மும்பையில் இருந்தபடியே கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதி அனுப்பினார்கள். அந்த கடிதங்களில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். எங்களது ஆதரவு கூட்டணி ஆட்சிக்கு இல்லை என்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர் மற்றும் நாகேஷ் தெரிவித்துள்ள னர். இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ள ஆர்.சங்கர் கூட்டணி ஆட்சியில் வனத்துறை மந்திரியாக இருந்தார். ஆனால் கடந்த மாதம் (டிசம்பர்) மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, ஆர்.சங்கரிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவர் கூட்டணி அரசு மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் கடும் அதிருப்தி அடைந்தார்.

அதுபோல, நாகேஷ் எம்.எல்.ஏ. தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 6 மாதங் களாக மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நாகேஷ் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

இதுபோன்ற காரணங்களால் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க் களான ஆர்.சங்கரும், நாகேசும் திரும்ப பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சைகள் வாபஸ் பெற்றுள்ள நிலையில் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-மந்திரி குமாரசாமி தனது அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

“அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை. எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும். கூட்டணி அரசு வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. எனவே கவலைப்பட தேவையில்லை. இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது?

நிலைமை எல்லாம் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது. பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குர்கானில் ஏன்? தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து எடியூரப்பாதான் சொல்ல வேண்டும். அவர்கள் சங்கராந்தி பண்டிகை கொண்டாடுவதற்காக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்களா? அல்லது வேறு காரணங்களுக்காகவா? என்பது எடியூரப்பாவுக்குதான் தெரியும். எங்கள் கட்சி எம்.எல். ஏ.க்களை ரெசார்ட்சில் தங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.”

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

தற்போது எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பெங்களூருவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

Next Story