பாப்பாரப்பட்டி அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் - விவசாயியை தாக்கியது


பாப்பாரப்பட்டி அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் - விவசாயியை தாக்கியது
x
தினத்தந்தி 17 Jan 2019 5:05 AM IST (Updated: 17 Jan 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை விவசாயியை தாக்கி அட்டகாசம் செய்தது.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). விவசாயி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் பூப்பறித்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது.

இந்த யானை திடீரென செல்வராஜை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் யானை அங்கிருந்து சென்று விட்டது. இதைத் தொடர்ந்து காயம் அடைந்த செல்வராஜை பொதுமக்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அந்த யானை அதே பகுதியை சேர்ந்த கன்னியப்பன் என்பவருடைய வீட்டின் அருகில் சென்றது. யானை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆக்ரோஷமாக சுற்றி திரிந்த அந்த யானை கன்னியப்பனின் மோட்டார்சைக்கிளை துதிக்கையால் தூக்கி வீசியது. மேலும் கால்களால் மிதித்து சேதப்படுத்தியது.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து யானை மொரப்பூர் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தண்ணீர் தேடி யானை ஊருக்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story