தூத்துக்குடி அருகே பரபரப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீர் கைது விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்
தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பண்டாரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்ராஜ் என்பவரும் இந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
இவர் கடந்த மே மாதம் 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தபோது, நீங்கள் யார்? என்று எதிர்கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.
திடீர் கைதுகடந்த டிசம்பர் மாதம் 19–ந் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு கல்லூரி முன்பு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களிடம் சிலர் வினியோகம் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தூத்துக்குடி பண்டாரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்ராஜிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் சந்தோஷ்ராஜை அழைத்து சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி திடீரென கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
சாலை மறியல்இதுகுறித்து தகவல் அறிந்த பண்டாரம்பட்டி மக்கள் உடனடியாக சந்தோஷ்ராஜை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கோவில் மணியையும் தொடர்ந்து அடித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். தொடர்ந்து போராட்டம் நடந்தது.
தீவிரம் அடையும்இதுகுறித்து சந்தோஷ்ராஜின் தாய் வசந்தி கூறியதாவது:–
எனது மகன் காலை 11–30 மணி வரை என்னுடன் இருந்தான். அதன்பிறகு தூத்துக்குடி செல்வதாக கூறினான். அப்போது திடீரென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. இதனால் அவன் பதற்றத்துடன் புறப்பட்டு சென்றான். இதுவரை அவன் எங்கு இருக்கிறான்? என்று தெரியவில்லை. போலீசார் ஊரைச்சுற்றி நின்று எங்களைத்தான் அடக்க நினைக்கிறார்களே தவிர, மகனை பற்றி தகவல் இல்லை. நாங்கள் ஸ்டெர்லைட் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். முதல்–அமைச்சரும் அதைத்தான் கூறுகிறார். என் மகன் மீது பொய்வழக்கு போடக்கூடாது. என் மகன் வரவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த மகேஷ் கூறும் போது, ‘‘பண்டாரம்பட்டி சந்தோஷ்ராஜை கைது செய்து இருப்பதை, போராட்டத்தை ஒடுக்கும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பார்க்கிறோம். வருகிற 20–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதால் முன்னெச்சரிக்கையாக இது போன்று நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை. உடனடியாக சந்தோஷ்ராஜை விடுவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் முதல்–அமைச்சர் வருகையின்போது வலுவான போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.