மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்


மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Jan 2019 4:30 AM IST (Updated: 18 Jan 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம்,

சென்னை அரக்கோணம், திருவேற்காடு பகுதிகளை சேர்ந்த 22 பேர் கடந்த 15-ம் தேதி சென்னையில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வேனில் புறப்பட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவர். அரக்கோணத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 27) என்பவர் வேனை ஓட்டினார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் காலை ஊட்டிக்கு வந்தனர்.

பின்னர் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று காலை 11 மணிக்கு ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மீண்டும் சென்னைக்கு வேனில் புறப்பட்டனர். மாலை சுமார் 4 மணியளவில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வேன் வந்து கொண்டு இருந்தது. முதல் கொண்டை ஊசி வளைவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர்.

அந்த நேரத்தில் அங்கு சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்சுகளில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ரமேஷ், சரளா (40), ஜோதிகா (16), ரவி (51), கவிதா (34), குமரன் (24), மற்றொரு ரவி (47), அம்மு (40) உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர். முதலுதவிக்கு பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுவாக சமதள பகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள் மலைப்பகுதியில் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


Next Story