தமிழக-கேரள எல்லையில் மலை கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மாவோயிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு நோட்டீஸ் ஒட்டிச்சென்றனர்


தமிழக-கேரள எல்லையில் மலை கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மாவோயிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு நோட்டீஸ் ஒட்டிச்சென்றனர்
x
தினத்தந்தி 18 Jan 2019 4:00 AM IST (Updated: 18 Jan 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழக- கேரள எல்லையில் உள்ள மலை கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மாவோயிஸ்டுகள், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று நோட்டீசுகளை ஒட்டிச்சென்றனர்.

கோவை,

கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. கேரள வனத்துறையினர் மற்றும் போலீசார் மீது அடிக்கடி தாக்குதல் நடத்திவிட்டு தமிழக- கேரள மாநில எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பதுங்கி கொள்கிறார்கள்.

இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நாடுகாணி மலை கிராமத்துக்குள் மாவோயிஸ்டுகள் 4 பேர் துப்பாக்கியுடன் புகுந்தனர். அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பொருட்களை வாங்கிச்சென்றனர். பின்னர் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலையாளத்தில் எழுதப்பட்ட நோட்டீசுகளை ஒட்டிச்சென்றனர்.

மாவோயிஸ்டுகள் ஒட்டிச்சென்ற நோட்டீசுகளில், தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல. அவர்களுக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.800 வழங்க வேண்டும். வேலையில் இருந்து யாரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது. இவண் சி.பி.ஐ. மாவோயிஸ்டு, நாடுகாணி. மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசுகளை ஒட்டிவிட்டு அட்டமலா, வயநாடு வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தப்பிச்சென்றனர்.

தப்பிச்சென்ற மாவோயிஸ்டுகள் தமிழக எல்லைப்பகுதியில் ஊடுருவுவதை தடுக்க, நக்சலைட்டு தடுப்பு படையினர் தமிழக பகுதியான காரமடை வனப்பகுதியில் உள்ள சுயம்புகரை, தூமனூர், கோபனாரி, குடபதி, வேப்பமரத்தூர், சுண்டப்பட்டி, பில்லூர் அணைப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

மேற்கு மண்டல நக்சலைட்டு தடுப்பு படையினர் தண்ணீர்பள்ளம், முள்ளியாறு, பெரும்பள்ளம், முள்ளி, எழுச்சிவழி மலைப்பகுதியில் சோதனை நடத்தி வருகிறார்கள். சிறப்பு அதிரடிப்படையினர் ராயரூத்துபதி பகுதியிலும், மற்றொரு அதிரடிப்படையினர் அத்திக்கடவு பகுதியிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலை கிராமங்களில் கோவை மாவட்ட போலீசார் மாவோயிஸ்டுகளின் உருவப்படங்களை நோட்டீசுகளாக அச்சடித்து ஒட்டி வருகிறார்கள். மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகளுக்கு மலை கிராம மக்கள் உதவி செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

கேரள, தமிழக எல்லைப்பகுதியான வயநாடு, மலப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தேயிலை தோட்டங்கள் அதிகம் இருப்பதால், தோட்ட தொழிலாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அவர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று நோட்டீசுகளை ஒட்டிச்சென்று இருப்பதாகவும், தோட்ட தொழிலாளர்கள் மாவோயிஸ்டுகளுக்கு உதவக்கூடாது என்றும் தமிழக, கேரள அதிரடிப்படை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story