சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் களை கட்டிய தமிழர் திருவிழா


சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் களை கட்டிய தமிழர் திருவிழா
x
தினத்தந்தி 17 Jan 2019 10:30 PM GMT (Updated: 17 Jan 2019 10:43 PM GMT)

உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழா களைகட்டியது.

குடிமங்கலம்,

உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. கால்நடைகளின் காவல் தெய்வமாகவும், விவசாயிகளின் தோழனாகவும் இங்குள்ள இறைவனை போற்றி வழிபடுகின்றனர். அந்த வகையில் தமிழர் திருநாள் 2-ம் நாள் திருவிழாவான நேற்று திருப்பூர்,கோவை மாவட்டங்களைச்சேர்ந்த ஏராளமான மக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு திரண்டு வரத்தொடங்கினர்.

கிராமப்புறங்களை சேர்ந்த விவசாயிகள் மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்திருந்தனர். மேலும் ஏராளமானோர் மோட்டார்சைக்கிள்கள்,கார்களில் வந்திருந்தனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தைச் சுற்றிலும் விதவிதமான உணவுப்பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள், பேன்சி கடைகள், பாத்திரக்கடைகள், உழவுக்கருவிகள் விற்பனை செய்யும் கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சர்க்கஸ், மரணக்கிணறு, ராட்டினங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் குழந்தைகளைக் கவர்வதாக இருந்தது. அத்துடன் ஆடு, மாடு, கோழி, வாத்து போன்ற கால்நடைகளின் உருவார பொம்மைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது.

இவற்றை வாங்கிய பக்தர்கள் தங்கள் வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் நலமாக வாழ உருவார பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். கோவில் வளாகத்திலுள்ள பிரமாண்டமான மாட்டின் சிலை முன்பாக உருவார பொம்மைகளை வைத்து தேங்காய் தண்ணீரால் அவற்றின் கண்களைத்திறந்து வழிபட்டனர். மேலும் தங்கள் வீட்டிலுள்ள கால்நடைகளின் பாலைக்கொண்டு வந்து ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் தை மாதத்தின் முதல் நாளில் பிறக்கும் கால்நடைகளை கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கினர். இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களிடம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 மற்றும் ரூ.20 என 2 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதற்கும் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் ஊருக்குப் பொதுவாக வளர்க்கப்படும் சலக்கெருதுகளுடன் ஊர்வலமாக வந்த இளைஞர்கள் பாரம்பரிய இசையுடன் நடனமாடி பக்தர்கள் மற்றும் பொதுமக்களை மகிழ்வித்தனர். மேலும் தேவராட்டம் எனப்படும் பாரம்பரிய நடனமாடிய இளைஞர்களும் பொதுமக்களை கவர்ந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே இடத்தில் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பொதுமக்கள் ஒழுங்குபடுத்தினர்.

Next Story