பெங்களூருவில் இன்று நடக்கிறது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : 8 பேர் புறக்கணிக்க முடிவு?


பெங்களூருவில் இன்று நடக்கிறது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : 8 பேர் புறக்கணிக்க முடிவு?
x
தினத்தந்தி 18 Jan 2019 12:21 AM GMT (Updated: 18 Jan 2019 12:21 AM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதிருப்தியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி களின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேலும் மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் ரமேஷ் ஜார்கிகோளி, காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர் மற்றும் நாகேஷ் கடந்த 15-ந் தேதி தங்களது ஆதரவை திரும்ப பெற்றனர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் அதிருப்தியில் உள்ள ரமேஷ் ஜார்கிகோளி, மந்திரி பதவி கிடைக்காமல் உள்ள நாகேந்திரா, ஆனந்த் சிங், கணேஷ், உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கூட்டணி அரசை காப்பாற்றவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையொட்டி அவர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தவும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்தனர்.

2 சுயேச்சைகள் ஆதரவு வாபஸ் மற்றும் குதிரை பேர புகார் என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் மாநில தலைவா் தினேஷ் குண்டுராவ், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அப்போது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். மேலும் அந்த எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தவும், பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், பெங்களூருவில் இன்று நடைபெறும் கூட்டத்தில் சபாநாயகர் தவிர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 79 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை. ரமேஷ் ஜார்கிகோளி உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். இதனால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது. இதுபோல, மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் அனைவரும் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான நாகேந்திரா நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக போவதாக வெளியாகும் தகவல் உண்மை அல்ல. நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். மும்பைக்கு சென்றது உண்மை தான். சொந்த காரணங்களுக்காக மும்பை சென்றிருந்தேன். என் மீது நடைபெறும் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருப்பதால், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன்’ என்றார்.

இதுபோன்று, மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஆனந்த்சிங் நிருபர்களிடம் கூறும்போது, ‘நான் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக அடிக்கடி சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியிலேயே உள்ளேன். மும்பைக்கு செல்லவில்லை. பெங்களூருவிலேயே இருக்கிறேன். நாளை (அதாவது இன்று) நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வேன்’ என்றார்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஆனந்த்சிங் கூறினாலும், அவர் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த, அவர்களுக்கு மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக மூத்த மந்திரிகள் 5 பேர் தங்களது பதவியை விட்டு கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை(அதாவது இன்று) நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்வார்கள். எந்த எம்.எல்.ஏ.க் களும் அதிருப்தியில் இல்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கொடுப்பதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. மந்திரிசபையை விரிவாக்கம் செய்யும் எந்த முடிவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story