நெல்லிக்குப்பம் அருகே கோஷ்டி மோதல்: தொழிலாளி வெட்டிக்கொலை 25 வீடுகள் சூறை – வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன


நெல்லிக்குப்பம் அருகே கோஷ்டி மோதல்: தொழிலாளி வெட்டிக்கொலை 25 வீடுகள் சூறை – வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன
x
தினத்தந்தி 19 Jan 2019 5:15 AM IST (Updated: 18 Jan 2019 7:56 PM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் 25 வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ்அருங்குணத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). அண்ணாகிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக இருந்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் தாமோதரன் (52). அ.தி.மு.க.பிரமுகர். இவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த உள்ளாட்சி தேர்தல் முதலே முன்விரோதம் இருந்து வருகிறது.

இவர்கள் 2 பேரும் தனி, தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காணும் பொங்கல் அன்று சுபாஷ், தாமோதரன் கோஷ்டிகளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சற்று நேரத்தில் இந்த தகராறு முற்றி மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, செங்கல் போன்றவற்றால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போது வீடுகள் மீது சிலர் செங்கற்களை வீசி எறிந்தனர். இதில் 25 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இதில் தாமோதரன் தரப்பை சேர்ந்த வேங்கடபதி என்பவரது வீடு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதில் அவரது வீடு தீப்பற்றி எரிந்து கதவு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.

மேலும் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இரு தரப்பை சேர்ந்தவர்களின் 10 மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ, மாட்டு வண்டி போன்ற வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கோஷ்டி மோதலில் அந்த தெரு முழுவதும் செங்கற்கள், பாத்திரங்கள் நாலாபுறமும் சிதறி கிடந்தன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்த தாக்குதலில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தொழிலாளியான தங்கவேல் (37), முத்துராமன் (45), சிவராமன் மகள் சுபாஷினி (10), ஞானவேல் (21) ஆகிய 4 பேர், சுபாஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகிய 2 பேர் என மொத்தம் 6 பேர் வெட்டுக்காயமடைந்தனர். அவர்கள் 6 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தங்கவேல் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மேல்சிகிச்சைக்காக மணிகண்டன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், சுபாஷினி கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சாந்தி, நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த மோதல் தொடர்பாக தாமோதரன் தரப்பை சேர்ந்த ஞானவேல் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ், சுதாகர், சுரேஷ், சுகாஷ், பிரபாகரன், ஸ்ரீதர், இன்பசக்தி, மகேஷ், பிரபு, அமுதபாபு, ராகுல், அமிர்தலிங்கம், சத்தியமூர்த்தி, கவிதா, மணிகண்டன், சேதுபதி ஆகிய 16 பேர் மீது வழக்குப்பதிவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ், சத்தியமூர்த்தி (22), அமிர்தலிங்கம் (57) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த தங்கவேலுக்கு கங்காதேவி என்ற மனைவியும், கவி, முத்து ஆகிய 2 மகன்களும், கயல்விழி என்ற மகளும் உள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதல் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story