ரூ.98 லட்சம் நகை கொள்ளை வழக்கு: சரணடைந்த 2 பேரை 6 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோவை கோர்ட்டு உத்தரவு


ரூ.98 லட்சம் நகை கொள்ளை வழக்கு: சரணடைந்த 2 பேரை 6 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோவை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Jan 2019 12:00 AM GMT (Updated: 18 Jan 2019 2:59 PM GMT)

ரூ.98 லட்சம் நகை கொள்ளை வழக்கில் சரணடைந்த 2 பேரை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

கோவை,

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லரியில் இருந்து கடந்த 7–ந் தேதி கோவையில் உள்ள நகை கடைக்கு காரில் ரூ.98 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை ஊழியர்கள் கொண்டு வந்தனர். அந்த கார் மதுக்கரை அருகே வந்த போது 12 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து நகையை கொள்ளையடித்து சென்றது.

இது குறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணையில், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ், கும்பல் தலைவனாக செயல்பட்டு இந்த கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பைரோசை ஆந்திராவில் போலீசார் மடக்கிப்பிடித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகையை விற்பதற்காக சென்றபோது பைரோசின் சகோதரர் சலீம்,தாயார் ‌ஷமா ஆகியோரை ஆந்திரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 10 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆந்திர போலீசார் பறிமுதல் செய்த 2 கிலோ நகையையும் கோவை கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 26), ஜெயபிரகாஷ் (32) ஆகிய 2 பேர் கடந்த 10–ந் தேதி சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் சென்னை சென்று கோர்ட்டு அனுமதியுடன், அவர்கள் 2 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நேற்று அவர்கள் 2 பேரையும் கோவையில் உள்ள 7–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

அத்துடன் அவர்கள் 2 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மாஜிஸ்திரேட்டு பாண்டி உத்தரவிட்டார்.

இதையடுத்து தமிழ்ச்செல்வன், ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீசார் பாதுகாப்புடன் கோவையில் உள்ள ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

காவலில் எடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுக்கரை அருகே இந்த கொள்ளை சம்பவம் நடந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இருந்தார். அந்த வீடியோதான் கொள்ளை கும்பலை அடையாளம் காண முக்கிய ஆதாரமாக இருந்தது. அதை வைத்துதான் கொள்ளை கும்பலை பிடித்து உள்ளோம்.

மேலும் இந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கொள்ளையடித்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story