எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நெல்லை வருகை சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு


எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நெல்லை வருகை சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 19 Jan 2019 3:00 AM IST (Updated: 18 Jan 2019 9:26 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை வருகிறார்.

நெல்லை, 

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா நெல்லையில் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:–

பொதுக்கூட்டம் 


மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. 102–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 20–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் நடக்கிறது.

நெல்லை மாநகர், புறநகர் மாவட்டம் சார்பில் டவுன் வகையடி முனையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

முதல்–அமைச்சர் நாளை வருகை 


விழாவில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து எடப்பாடி பழனிசாமி நாளை காலை 11 மணி அளவில் நெல்லை வருகிறார். அவருக்கு பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருகே மாநகர் மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பின்னர் அவர் மாதா மாளிகை செல்கிறார். அங்கு மாற்றுக்கட்சியை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு அவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகை செல்கிறார். அங்கு அவர் ஓய்வு எடுக்கிறார்.

அமைச்சர்கள்– எம்.பி.க்கள் 


பின்னர் சுமார் 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடக்கும் நெல்லை டவுன் வாகையடி முனை வருகிறார். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிவிட்டு இரவு மதுரை புறப்பட்டு செல்கிறார். கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர், புறநகர் மாவட்டம் ஆகியவை இணைந்து செய்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, விஜிலா சத்யானந்த் எம்.பி., இன்பதுரை எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story