தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் சேதம் அடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் சேதம் அடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2019 10:15 PM GMT (Updated: 18 Jan 2019 6:24 PM GMT)

தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் சேதம் அடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி அமைப்பாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன், கட்சி நிர்வாகிகள் மகிமைதாஸ், டாக்டர் முரளி, கண்ணதாசன், கிறிஸ்டி என்கிற அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திரளான பொதுமக்கள் பேரம்பாக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதம் அடைந்து அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பேரம்பாக்கத்தில் இருந்து இருளஞ்சேரி, நரசிங்கபுரம், கொண்டஞ்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

சேதம் அடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும், அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும், தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும், குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ. அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பேரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story