எதிர்க்கட்சியை காரணம் காட்டி கோடநாடு விவகாரத்தை திசை திருப்ப அ.தி.மு.க. முயற்சி கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு


எதிர்க்கட்சியை காரணம் காட்டி கோடநாடு விவகாரத்தை திசை திருப்ப அ.தி.மு.க. முயற்சி கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Jan 2019 11:15 PM GMT (Updated: 18 Jan 2019 7:42 PM GMT)

எதிர்க்கட்சியை காரணம் காட்டி கோடநாடு விவகாரத்தை திசை திருப்ப அ.தி.மு.க. முயற்சி செய்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கோவை,

கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த முன்னோடி ஜீவாவின் நினைவுநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஜீவாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கேரளா சென்ற பிரதமர் மோடி, தான் பிரதமர் என்பதையே மறந்துவிட்டு சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் பேசியது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பிரதமர் மதிக்கவில்லை என்றால், யாரும் எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என்ற மோசமான நிலைக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும். எனவே சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும். பிரதமரின் இந்த பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்து உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சயன், மனோஜ் ஆகியோர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின்பேரில்தான் நடைபெற்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக எவ்வித விசாரணையின் முன்பு ஆஜராகாமல் அவர்கள் இருவரும் கைது செய்ததை கண்டு நீதிபதியே ஆச்சரியம் அடைந்தார். அத்துடன் அவர்களை நீதிபதி திருப்பி அனுப்பிவிட்டார்.

எனவே குறைந்தபட்ச சட்டவரம்புகளை மீறி எதிர்கருத்தை யார் சொன்னாலும் கைது செய்வது, கோர்ட்டில் நிறுத்துவது என்பது நியாயமற்றது. எனவே இந்த சம்பவத்துக்கு பதில் சொல்ல வேண்டிய முதல்–அமைச்சர், தனக்கு சம்பந்தம் இல்லை என்று காலம் கடத்துவது ஏற்புடையதல்ல.

சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தி தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும். அத்துடன் இதற்கு முறையான பதிலை அ.தி.மு.க. கூற வேண்டும். அவ்வாறு செய்யாமல் எதிர்க்கட்சியை காரணம் காட்டி இந்த வழக்கை அ.தி.மு.க. திசை திருப்ப முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கூட்டணி அமையாது. மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். பா.ஜனதாவை தோற்கடித்த பிறகு மதசார்பற்ற அரசு அமைக்க விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு’ என்றார்.

பிறகு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story