மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றவேண்டும் அ.தி.மு.க. வலியுறுத்தல்


மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றவேண்டும் அ.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jan 2019 5:00 AM IST (Updated: 19 Jan 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் சில சீர்திருத்தங்களை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் பல்வேறு அரசு அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய ஒவ்வொரு மாநில தலைமை செயலாளருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு புதுச்சேரி மாநிலத்தில் பொருந்தக்கூடிய சூழல் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி 2014–ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பணிபுரிந்து ஒரு சட்டசபை தேர்தல், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு இடைத்தேர்தல் நடத்தியுள்ளார். அவர் புதுச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். இதை பார்க்காமல் இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கே அந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

புதுச்சேரியில் முதல்–அமைச்சருக்கும், கவர்னருக்கும் 2 ஆண்டுக்கு மேலாக பெரிய அளவில் மோதல் போக்கு உள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரியில் பல்வேறு நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் 2 பிரிவாக பிரிந்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு முதலில் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு பொருந்த வேண்டும். தலைமை தேர்தல் அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story