என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 4:45 AM IST (Updated: 19 Jan 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நேற்று 3-வது நாளாக சாட்சியம் அளித்தார். இந்த வழக்கை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவரது கொலை தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவரது தாயார் செல்வி உள்பட 41 பேர் சாட்சியம் அளித்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடந்தது. அப்போது திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதற்கிடையே நேற்றும் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 15 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நேற்று 3-வது நாளாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது சம்பவம் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர்களை மணிவண்ணன், வீடியோ காட்சியை பார்த்து அடையாளம் காட்டினார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். அன்று கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கோர்ட்டு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சிறப்பு அரசு வக்கீலாக நியமனம் செய்யப்பட்ட வக்கீல் பா.மோகன் தான் இந்த விசாரணையின் போது ஆஜராகி வாதாட வேண்டும் என்பதற்குரிய தகுந்த உத்தரவை கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும் என்ற மனுவை, கோகுல்ராஜின் தாயார் சித்ரா நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story