ஜெயங்கொண்டத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஜெயங்கொண்டத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 5:04 AM IST (Updated: 19 Jan 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பொங்கல் விடுப்பு முடிந்து நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பஸ்சுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது போதுமான பஸ்கள் இல்லாததாலும், வழக்கமாக வரும் பஸ்களை சென்னை போன்ற நகரங்களுக்கு சிறப்பு பஸ்களாக இயக்கவிட்டதாலும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், பஸ்களில் ஏறிச்செல்ல முடியாமல் அவதியுற்றனர்.

மேலும் பெரும்பாலான மாணவர்கள் பஸ் பாஸ் மட்டுமே வைத்திருந்தனர். இதனால் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் கூடுதல் பஸ் இயக்கக்கோரி ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் பிள்ளையார்கோவில் பஸ்நிறுத்தத்திற்கு அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சிரமமின்றி சென்றுவர கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும். இதுபோன்ற விசேஷ நாட்களில் அனைத்து பஸ்களிலும் பஸ் பாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இதே நிலை நீடித்தால் நாளையும் (இன்று) போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து தொடர்ந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story