மந்திராலயா முன்பு பெண் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மந்திராலயா முன் பெண் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
மராட்டிய அரசின் தலைமை செயலகமான மும்பையில் உள்ள மந்திராலயா கட்டிடத்தில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்கின்றன. நேற்று மந்திராலயாவுக்கு பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் மந்திராலயா கட்டிட வளாகத்தின் முன்பு தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று அந்த பெண்ணை தடுத்து பிடித்துக்கொண்டனர்.
பின்னர் அந்த பெண் மெரின்டிரைவ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பீட் பகுதியை சேர்ந்த அருண் காம்பிளே என்பவரின் மனைவி சாரதா என்பது தெரியவந்தது. விவசாயத்துக்காக ரூ.2 லட்சம் பயிர்க்கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், அரசு தான் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாததால் மந்திராலயா முன்பு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மந்திராலயா முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story