சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் அமைப்பதில் தோல்வி ஏன்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி


சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் அமைப்பதில் தோல்வி ஏன்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 19 Jan 2019 5:25 AM IST (Updated: 19 Jan 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

சத்ரபதி சிவாஜிக்கு நினைவு சின்னம் அமைக்கும் பணியில் தோல்வி ஏற்பட்டது ஏன் என பா.ஜனதாவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை, 

அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் பிரமாண்ட சிலையுடன் நினைவு சின்னம் அமைக்க மராட்டிய அரசு திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் இந்த திட்டத்திற்கு சமீபத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதுகுறித்து நேற்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிட்டப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

குஜராத் அரசு நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வெற்றிகரமாக சிலை அமைத்துள்ளது. அங்கு எந்த சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப பிரச்சினையும் ஏற்படவில்லை.

ஆனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது மற்றும் சத்ரபதி சிவாஜிக்கு நினைவிடம் அமைப்பது போன்ற விவகாரங்களில் இன்னும் தீர்வு காணப்படவில்லை.

நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் கோர்ட்டு தலையிடுகிறதா அல்லது நினைவிடத்தை அமைக்க விரும்பாதவர்கள் நீதித்துறையை இந்த விவகாரத்தில் கேடயமாக பயன்படுத்துகிறார்களா?

சிலர் சத்ரபதி சிவாஜி மற்றும் பால் தாக்கரேக்கு எதற்காக நினைவிடம் அமைக்கவேண்டும் என்று கேட்கின்றனர்.

சத்ரபதி சிவாஜி இல்லையென்றால் பாகிஸ்தான் எல்லை உங்கள் வீட்டு வாசலில் இருந்திருக்கும். பால் தாக்கரே இல்லையெனில் இந்துக்கள் “நமாஸ்” செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

சுப்ரீம் கோர்ட்டில் தங்கள் நிலைப்பாட்டை எடுத்து வைப்பதில் அரசு ஏன் தொடர்ந்து தோல்வி அடைகிறது? வெற்றியை விலை கொடுத்து வாங்குவதில் மட்டும் இந்த அரசு ஒருபோதும் தோல்வியடைந்ததே இல்லை. ஆனால் இந்த பிரச்சினையில் மட்டும் ஏன் தோல்வி அடைகிறது?

மற்ற விவகாரங்களில் இந்த அரசு விரைவாக தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறது. இந்த விவகாரத்தில் மட்டும் கெடுபிடிகளை தளர்த்திக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story