சமயபுரம் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.6 கோடி நகை-பணம் தப்பியது


சமயபுரம் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.6 கோடி நகை-பணம் தப்பியது
x
தினத்தந்தி 19 Jan 2019 5:53 AM IST (Updated: 19 Jan 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.6½ கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது.

சமயபுரம்,

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை சமயபுரம் கடைவீதியில் இருந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. இந்த வங்கியில் மேலாளர் சேகர் உள்பட 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு சமயபுரம், வே.துறையூர், மருதூர், மாகாளிகுடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் வங்கியின் வலது பக்கத்தில் உள்ள சுற்றுச்சுவரின் கற்களை பெயர்த்து வளாகத்தில் நுழைந்து, பின்னர் வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த அலாரம் மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமராவிற்கு செல்லும் மின் வயர்களை துண்டித்தனர். மேலும் உள்ளே இருந்த அனைத்து கேமராக்களின் கண்ணாடிகளில் குங்குமத்தை தூவினர்.

இதைத்தொடர்ந்து பெட்டகம் இருந்த அறைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த வெல்டிங் எந்திரம் மூலம் லாக்கரை உடைக்க நீண்ட நேரம் போராடினர். ஆனால் அதை உடைக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் 6½ கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.46 லட்சம் ரொக்கம் ஆகியவை தப்பின.

இந்நிலையில் விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள், முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசாரும், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் வங்கிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவாகியிருந்த கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் ‘ஸ்பார்க்‘ வங்கியில் இருந்து அதன் பின்பக்கம் மற்றும் கடைவீதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு மோப்பம் பிடித்தபடியே மார்க்கெட் பகுதியில் ஓடி, சென்று நின்று விட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் மற்றும் போலீசார் வங்கிக்கு வந்து சுமார் அரை மணி நேரம் வங்கி ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றதை அறிந்து, வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருந்த பெண்கள் உள்பட வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் நகை என்ன ஆனதோ? என்ற பதற்றத்துடன் வரத்தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், வங்கியில் உள்ள அனைத்து பகுதிகளையும் நன்கு அறிந்த மர்ம நபர்கள் திட்டமிட்டு, வங்கிக்கு தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் இந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கலாம். இந்த சம்பவத்தில் 2 அல்லது 3 பேர் ஈடுபட்டிருக்கலாம். வங்கியின் ஜன்னல் பலவீனமாக இருந்ததால் அதை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள், என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுகனூர் அருகே வனப்பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவரை குத்திக்கொன்ற நபர்கள், அவருடைய காதலியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது போலீசுக்கு சவால்விடும் வகையில் உள்ளது.

Next Story