நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 141 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பாஸ்கர் வழங்கினார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 141 மாணவ–மாணவிகளுக்கு துணைவேந்தர் பாஸ்கர் பட்டங்களை வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 141 மாணவ–மாணவிகளுக்கு துணைவேந்தர் பாஸ்கர் பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்கக பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கில் நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி, 141 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் பி.எட். படித்த 93 பேர், இளநிலை 21 பேர், முதுநிலை 27 பேர் என மொத்தம் 141 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
சென்னை ‘டாட்டா ரியாலிட்டி மற்றும் உள்கட்டமைப்பு குழும’ தலைமை செயல் அலுவலர் வேலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
தொழில்நுட்பத்தில் முதலிடம்இந்திய நாட்டின் பலமாகவும், பலவீனமாகவும் இருப்பது மக்கள் தொகை பெருக்கம். இந்தியாவில் 60 சதவீதம் இளைஞர்கள் இருந்தபோதிலும் சீனா முன்னேற்றம் கண்டுள்ளது. நாமும் முன்னேறி வருகிறோம். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு இயற்கை வளம் உள்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கல்வி மிக முக்கியமானது ஆகும்.
தொழில்நுட்பத்தில் இந்தியா முதன்மையாக உள்ளது. தொழில்நுட்ப கல்விக்கு நாடு முக்கியத்துவம் அளித்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம். மேலும் பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு எத்தகைய கல்வி தேவை என்பதை கருதி செயல்பட்டனர்.
படிப்பால் கிடைக்கும் உயர்வுபடிப்பும், உழைப்பும் இணையும்போது கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. படிப்பால் கிடைக்கும் உயர்வுக்கு உலகில் எந்த வகையிலும் இணையானது கிடையாது. எனவே அனைவரும் தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தில் பட்டம் பெற்றாலும், தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு, தேர்வாணையர் சுருளியாண்டி, தொலைநெறி தொடர் கல்வி இயக்கக இயக்குனர் தமிழ்ச்செல்வம், கூடுதல் தேர்வாணையர் முருகன் மற்றும் துறை தலைவர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.