முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகை எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்


முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகை  எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
x
தினத்தந்தி 20 Jan 2019 3:30 AM IST (Updated: 19 Jan 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகிறார். இங்கு நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார்.

நெல்லை, 

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகிறார். இங்கு நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். 102–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்குகிறார்.

முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார். அமைச்சர்கள், எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் நெல்லைக்கு வருகிறார்.

அலங்கார வளைவுகள்

இதையொட்டி அவருக்கு பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் வைத்தும், நெல்லை மாவட்ட எல்லையில் வைத்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. முதல்–அமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாநகர பகுதி முழுவதும் கட்சி கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளன. நெல்லை டவுன் வாகையடி முனையில் இருந்து பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மாதா மகால் வரை இருபுறங்களிலும் அ.தி.மு.க. கொடிகளும், மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் அலங்கார வரவேற்பு வளைவுகளும், பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளன.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதையொட்டி நெல்லை–பாளையங்கோட்டை சாலைகள் சீரமைக்கப்பட்டு, வேகத்தடைகள் அகற்றப்பட்டு உள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலம், மேம்பாலம், புறவழிச்சாலை ஆற்றுப்பாலம், தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் ஆகியவற்றில் உள்ள தூண்கள் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. நெல்லை மாநகரத்தில், நெல்லை மாநகர், புறநகர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story