திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் 300 மரங்களை தீ வைத்து எரித்த மர்ம ஆசாமிகள் அதிர்ச்சியில் பேராசிரியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இருந்த சுமார் 300 மரங்களை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் காலேஜ் ரோட்டில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 2,500 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தின் மாணவர் விடுதிக்கு அருகில் ஏராளமான மரக்கன்றுகள் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வேம்பு, புங்கை, ஈட்டி, கொய்யா, இலுப்பை, சந்தனமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான 1,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கப்பட்டு வந்தது. அப்துல்கலாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பூங்காவை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலரும் பேராசிரியருமான மோகன்குமார் மற்றும் மாணவ–மாணவிகள் பராமரித்து வருகின்றனர். தற்போது அவை 4 அடிமுதல் 6 அடிவரை வளர்ந்து மரங்களாகி விட்டன.
இந்த நிலையில் வனவிலங்குகள் பாதுகாப்பு வாரவிழா நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு நேற்று காலையில் மாணவ, மாணவிகள் கலாம் நினைவு பூங்காவிற்கு வந்தனர். அப்போது அங்கு எரிந்த நிலையில் மரங்கள் இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த அவர் தீயில் கருகிய நிலையில் கிடந்த மரக்கன்றுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்பு துக்கம் தாளாமல் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது நேற்று முன்தினம் மரங்களுக்கு அருகே வளர்ந்திருந்த புல்லுக்கு மர்ம ஆசாமிகள் தீவைத்துள்ளனர். அந்த தீ மளமளவென பரவி, அங்கு சொட்டுநீர் பாசனத்திற்காக போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களிலும் பிடித்தது. இந்த தீயால் அந்த பகுதியில் பச்சைப்பசேலென்று நின்று கொண்டிருந்த மரங்களிலும் பிடித்து எரிந்தது. இதில் சுமார் 300 மரங்கள் எரிந்து நாசமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறும் போது, ‘‘நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை கொண்டு அப்துல்கலாம் பூங்கா உருவாக்கி அதில் 1,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தோம். தினசரி கல்லூரிக்கு வந்தவுடன் அந்த மரக்கன்றுகளை ஒரு முறை பார்த்து விட்டுத்தான் கல்லூரிக்குள் செல்வேன்.
இந்த 2 ஆண்டுகளில் அந்த மரகன்றுகள் நன்கு செழித்து வளர்ந்து மரங்களாகி விட்டன. அவற்றை தீ வைத்து எரித்ததை பார்த்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. கதறி அழுது விட்டேன். துக்கம் தாளாமல் எனக்கு மயக்கம் வந்து விட்டது’’ என்றார்.
இது குறித்து கல்லூரி முதல்வர் ராமையா கூறும் போது, “மரங்களுக்கு தீ வைத்த இந்த சம்பவம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. இந்த செயலை யாரோ மர்ம ஆசாமிகள் திட்டமிட்டு செய்துள்ளனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.இந்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாங்கள் பராமரித்து வந்த மரங்கள் கருகி விட்டதால் மாணவ–மாணவிகளும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்.
கல்லூரி சுற்றுச்சுவரையொட்டி உள்ள இடத்தை தனிநபர் ஒருவர் வீட்டுமனைகளாக பிரித்து போட்டு விற்றுள்ளார். அப்போது கல்லூரி சுற்றுச்சுவரையொட்டி 50 அடி அகலத்தில் ரோடு உள்ளதாகவும், இந்த ரோட்டில் 20 அடியை சேர்த்து கல்லூரி சுற்றுச்சுவரை கட்டி உள்ளதாகவும், அதை விட்டு தர வேண்டும் என்றும் அந்த நபர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஒத்துக்கொள்ளாத கல்லூரி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த நபர் கல்லூரி நிர்வாகத்தினரை சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைத்ததாகவும், அவர்கள் பேச்சு வார்த்தைக்கு செல்ல மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் சர்வலோகதயாபரன் தெரிவித்தார்.