பாம்பன் தூக்குப்பாலம் பழுது: ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க பொதுமக்கள் வேண்டுகோள்


பாம்பன் தூக்குப்பாலம் பழுது: ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Jan 2019 11:15 PM GMT (Updated: 19 Jan 2019 3:33 PM GMT)

பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பழுதால் நிறுத்தப்பட்ட ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே தூக்கு பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாலத்தில் கடந்த மாதம் 4–ந்தேதி விரிசல் ஏற்பட்டதால், அதை உடனடியாக சீரமைத்தாலும், தூக்குப் பாலத்தில் முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து நேற்று வரை சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன.

இந்தநிலையில் தூக்குப் பாலத்தில் சேதமான இரும்பு தகடுகள் அகற்றப்பட்டு புதிய இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டு, பாலத்தின் உறுதி தன்மையை அதிகரிக்கும் வகையில் எடையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரும்பு பாலம் துருப்பிடிக்காத வகையில் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் 2 முறை காலி பெட்டிகளுடன் தூக்குப் பாலம் வழியாக ரெயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் தூக்குப்பாலம் பழுது சரிசெய்யப்பட்ட நிலையில், ராமேசுவரம் வரை ரெயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டு 1½ மாதத்திற்கும் மேலாகியும், மீண்டும் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்று ரெயில்வே துறை இதுவரை எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பும் செய்யவில்லை. ரெயில் போக்குவரத்து தற்போதுக்குள் நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே ரெயில்வே தூக்கு பாலம் வழியாக பயணிகளுடன் ராமேசுவரம் வரை மீண்டும் ரெயில் போக்கு வரத்தை விரைவில் தொடங்க வேண்டும். அது எப்போது தொடங்கும் என அதிகார பூர்வமாக அறிவிக்கவும் வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story