மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் 18 மாதங்களில் முடியும் அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் 18 மாதங்களில் முடியும் அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 20 Jan 2019 5:15 AM IST (Updated: 19 Jan 2019 9:03 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில், ரூ.356 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அதில் பேசிய துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘18 மாதங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடியும்‘‘ என்றார்.

மதுரை,

இந்தியாவில் உள்ள 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை நகரில் ரூ.1000 கோடிக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் முதல்கட்டமாக ரூ.356 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, பெரியார் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.

அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நடராஜன் வரவேற்று பேசினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி., நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஸ்மார்ட்சிட்டி என்பது மனிதர்கள் தாங்கள் வாழ்ந்திட எதிர்பார்க்கும் வசதிகளை விட, அதற்கும் மேலான, மேம்படுத்தப்பட்ட தேவையான எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களில் போதுமான குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம், சுகாதாரம், திறன் மிக்க பொதுப் போக்குவரத்து, ஏழைகளுக்கு வீட்டு வசதி, தகவல் தொடர்பு தொழில் நுட்ப வசதி, மின்னணு நிர்வாகம், டிஜிட்டல்மயமாக்கம், அனைத்துப் பணிகளிலும் மக்கள் பங்கேற்பு, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, கல்வி, மருத்துவ வசதி, மக்களுக்குப் பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படை தத்துவம், இயற்கை தந்த வளங்களைப் பாதுகாப்பதும், நகரின் புராதன மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதும் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், நகர விரிவாக்கத் திட்டங்களில் 80 சதவீதம் மின்சக்தியை மிச்சப்படுத்தும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மின்சார உற்பத்தி ஆதாரங்களில் சூரிய மின்சக்தி குறிப்பிட்ட அளவும் இடம் பெற்றிருக்கும்.

போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் தொழில் நுட்பஉதவியுடன் போக்குவரத்து முறை இயங்கும், பல்லடுக்கு வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு, வீட்டின் அருகே செல்லும் வகையில் வசதி உருவாக்கப்படும். வாழ்வாதாரம் கெடாத வகையில் மாற்று ஏற்பாட்டுடன் வழியை அடைந்து நிற்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பொது இடங்களில் ஆக்கிரமிப்பு இருக்காது. தலைக்கு மேல் கேபிள்கள் தொங்காது. அவை பூமிக்கு அடியில் புதைவடங்களாக கொண்டு செல்லப்படும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

அதிகமான விளையாட்டு மைதானங்கள், மிக அதிகமான பூங்காக்கள், உலகத் தரமான நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் ஆகியவை உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும். புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படும். அவை அமைந்துள்ள பகுதிகள் மேம்படுத்தப்படும். புராதன சின்னங்களை இணைத்திடும் வழித்தடங்கள் அமைக்கப்படும். ஆற்றங்கரைகளும், ஆற்று முகப்புகளும் மேம்படுத்தப்படும்.

மதுரை மாநகரில் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களை நிறைவேற்ற, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,020 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதில் 356.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்றைக்கு அடிக்கல் நாட்டப்படும் பணிகள் அனைத்தையும் 18 மாத காலங்களில் முடித்து, மதுரை மாநகர மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன், மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாறும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ரூ.159.70 கோடி மதிப்பீட்டில், பெரியார் பஸ் நிலையத்தில் மேற்கொள்ளவிருக்கும் மறுசீரமைப்பு பணிகளின் பயனாக அதிக பஸ்கள் நிறுத்துவதற்கும், 371 கார்கள் நிறுத்தவும், 4,865 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் வழிவகை ஏற்படும். மேலும், பயணியர் வசதிக்கென லிப்ட், மின் தூக்கி, மின்படிக்கட்டுகள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

வைகை ஆற்றின் இருபுறங்களிலும் ரூ.81.41 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் முகப்பு மேம்பாட்டுப் பணிகள், மீனாட்சி அம்மன் கோவில் அருகே ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் பல்லடுக்கு வாகன நிறுத்தம், ரூ.72.39 கோடி மதிப்பீட்டில் புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்தும் திட்டம், சுற்றுலா பயணிகள் வசதிக்கென பெரியார் பஸ் நிலையம் அருகே ரூ.2.65 கோடி செலவில் கட்டப் படவிருக்கும் சுற்றுலா பயணிகள் மையம் ஆகிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகளை 18 மாத காலங்களுக்கு முன்னரே, அவற்றை நிறைவு செய்து, மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மதுரை மாநகராட்சி அலுவலர்கள் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது கூறியதாவது:–

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க. அரசு 6 மாதங்களில் கவிழ்ந்து விடும் என்றார்கள். ஆனால் இந்த அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும். அதன்பின்னும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். கொடநாடு விவாகரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது. இந்த குற்றச்சாட்டை முதல்–அமைச்சர் தூள், தூள் ஆக்கி விடுவார்.

சாதாரணமாக இருந்த பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் அமைச்சர்கள் ஆகி விட்டார்கள். மதுரையில் தொண்டனாக இருந்த செல்லூர் ராஜூ அமைச்சர் ஆகி விட்டார். இதையெல்லாம் பார்த்து இவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆகிவிட்டார்களே என்ற ஏக்கத்தில் சிலர் துடித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் சாதாரணமானவர்கள் அமைச்சர்கள் ஆனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே ஆட்சி கலைந்து விடும் என்று கனவு காண்கிறார்கள். எங்களுக்கு கடவுள் கொடுத்து இருக்கிறார். கடவுள் கொடுத்ததை யாராலும் பறிக்க முடியாது. அதே போல் கடவுள் கொடுக்காததை நிச்சயம் யாராலும் பெற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், நீதிபதி, பெரிய புள்ளான், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், மாநகராட்சி துணை கமி‌ஷனர் மணிவண்ணன், நகரப்பொறியாளர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 904 பேருக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவில் மாநகராட்சி சார்பாக வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிப்பதற்கு 25 பேட்டரி வானகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story