குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் பெண்ணாடம் அருகே பரபரப்பு


குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் பெண்ணாடம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 10:45 PM GMT (Updated: 19 Jan 2019 3:59 PM GMT)

பெண்ணாடம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்டது தீடீர்குப்பம் கிராமம். இங்கு சுமார் 40–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் தெரு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் குடிநீருக்காக கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது சிறிது நேரம் மட்டுமே வழங்கியதால், அனைவருக்கும் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இவர்களது ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்தும் ஊராட்சி அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் சிறிது நேரத்தில் பெண்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களாகவே இந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை வருகிறோம். ஆனால் அவர்கள் இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கூட ஒரு வாரத்திற்கு பிறகு குடிநீர் வழங்கினார்கள். ஆனால் குறைந்த நேரத்திற்கே வழங்கியதால், பலர் குடிநீர் கிடைக்காமல் காலிக்குடங்களுடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்யாவிட்டால் அடுத்தகட்டமாக ரே‌ஷன்கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டம், மறியல் போன்ற பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story