வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தையை கடத்தி விற்ற 3 பேர் கைது ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய தமிழக தம்பதியும் சிக்கினர்


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தையை கடத்தி விற்ற 3 பேர் கைது ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய தமிழக தம்பதியும் சிக்கினர்
x
தினத்தந்தி 20 Jan 2019 4:15 AM IST (Updated: 19 Jan 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தையை கடத்தி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்துக்கு குழந்தையை வாங்கிய தமிழக தம்பதியும் போலீசாரிடம் சிக்கினர்.

பெங்களூரு,

பெங்களூரு ஞானபாரதி அருகே வசித்து வருபவர் ராணி. இவருடைய கணவர் பெயர் சந்தன் குமார். இந்த தம்பதிக்கு பிறந்து 11 மாதங்களே ஆன பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் அர்னாபீ குமாரி சிங் ஆகும்.

இந்த நிலையில் ராணி தனது வீட்டை காலி செய்து குடும்பத்துடன் இன்னொரு வீட்டில் வாடகைக்கு குடியேற முடிவு செய்தார். கடந்த 16-ந் தேதி இரவு சுமார் 8 மணியளவில் குழந்தை அர்னாபீ குமாரி சிங் வீட்டில் தூங்கி கொண்டிருந்தது. இந்த வேளையில், ராணி தனது பழைய வீட்டில் உள்ள பொருட்களை புதிதாக குடியேற உள்ள வீட்டுக்கு எடுத்து சென்றார். புதிய வீட்டில் இருந்து இரவு 8.30 மணிக்கு அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மாயமாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி மாயமான தனது குழந்தையை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால், எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்தது.

இதனால் தனது குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றதாக ஞானபாரதி போலீசில் ராணி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குழந்தையை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குழந்தையை கடத்தி விற்ற 3 பேரையும், அவர்களிடம் இருந்து குழந்தையை வாங்கிய தமிழக தம்பதியையும் போலீசார் கைது செய்தனர். அவர் களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் கைதானவர்கள் பெங்களூரு மல்லத்தஹள்ளியை சேர்ந்த அன்பு குமார் (வயது 43), பெங்களூரு கே.பி.அக்ரஹாரத்தை சேர்ந்தவர்களான மஞ்சுநாத் (19), யோகேஷ்குமார் (21), தமிழ்நாடு தூத்துக்குடி தவசிபெருமாள் ரோடு குமாரசாமி நகரை சேர்ந்த தாமஸ்பயாஸ் (55), அவருடைய மனைவி அருணா பயாஸ் (45) என்பது தெரியவந்தது.

அத்துடன் அன்புகுமார், மஞ்சுநாத், யோகேஷ் குமார் ஆகிய 3 பேரும் திட்டமிட்டு குழந்தையை கடத்தி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு வாங்கியதால் தமிழகத்தை சேர்ந்த தாமஸ் பயாஸ், அவருடைய மனைவி அருணா பயாஸ் ஆகியோரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் குழந்தையை கடத்திய 3 பேரும் உடனடியாக தமிழக தம்பதியிடம் குழந்தையை விற்பனை செய்ததும், குழந்தையை வாங்கிய தம்பதியான தாமஸ்பயாஸ்-அருணா பயாஸ் ஆகியோர் வாடகை காரில் தூத்துக்குடிக்கு விரைந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி அறிந்த போலீசார் அந்த தம்பதியை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தமிழக தம்பதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அனைத்தும் போலீசில் புகார் பதிவான 24 மணிநேரத்தில் நடந்து முடிந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story