பெங்களூருவுக்கு வந்த ராஜ்நாத்சிங்குடன் எடியூரப்பா திடீர் சந்திப்பு கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்


பெங்களூருவுக்கு வந்த ராஜ்நாத்சிங்குடன் எடியூரப்பா திடீர் சந்திப்பு கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்
x
தினத்தந்தி 19 Jan 2019 11:15 PM GMT (Updated: 19 Jan 2019 6:50 PM GMT)

பெங்களூருவுக்கு வந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கை நேற்று எடியூரப்பா திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் முகாமிட்டுள்ளனர். மேலும் டெல்லி, அரியானாவில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் பெங்களூருவுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள நேற்று மத்திய உள்துறை மந்திரியான ராஜ்நாத்சிங் பெங்களூருவுக்கு வந்திருந்தார்.

முன்னதாக டெல்லியில் இருந்து அவர் விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்கு அவரை, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவை சந்தித்தார். பின்னர் ராஜ்நாத் சிங்குக்கு பூச்செண்டு கொடுத்தும், மாலை அணிவித்தும் எடியூரப்பா வரவேற்றார்.

பின்னர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வைத்து ராஜ்நாத் சிங்கும், எடியூரப்பாவும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை 15 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசியல் நிலவரம் குறித்தும், கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருவது தொடர்பாகவும் 2 பேரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாமல் போனது, ஆபரேஷன் தாமரை தோல்வி குறித்தும், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ராஜ்நாத் சிங்குடன் எடியூரப்பா ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story