கடம்பூரில் பொதுமக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை அகற்ற முடிவு இடமாற்றம் செய்யும் இடத்திலும் இரவில் போராட்டம்


கடம்பூரில் பொதுமக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை அகற்ற முடிவு இடமாற்றம் செய்யும் இடத்திலும் இரவில் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2019 10:45 PM GMT (Updated: 19 Jan 2019 7:41 PM GMT)

கடம்பூரில் பொதுமக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அங்கிருந்து கடையை இடமாற்றம் செய்ய உள்ள இடத்திலும் பொதுமக்கள் இரவில் போராட்டம் நடத்தினார்கள்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் பஸ்நிலையம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு மதுகுடிக்க வருபவர்கள், போதையில் அட்டகாசம் செய்வதால் அந்த வழியாக வரும் பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்பு அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக கூறினார்கள். அதனால், போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியபடி, 20 நாட்களில் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதை அறிந்த அதிகாரிகள் சத்தி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் 20 நாட்கள் அவகாசம் கேட்டனர். இந்த கால அவகாசமும் ஜனவரி 18–ந் தேதி (நேற்று முன்தினம்) முடிந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் சம்பவ இடத்துக்கு போலீசாருடன் சென்று, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை அகற்ற முடிவு செய்துள்ளதாக உறுதி அளித்தார். அதனால் காத்திருப்பு போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

கடம்பூர் பஸ்நிலையம் அருகே அகற்றப்படும் டாஸ்மாக் கடை அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜீவா நகரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை இங்கு அமைக்கவேண்டாம் என்று தமிழக முதல்–அமைச்சரின் தனிப் பிரிவு, மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் கடம்பூரில் உள்ள டாஸ்மாக் கடையை ஜீவா நகரில் இடமாற்றம் செய்ய கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவே அந்த பகுதி பொதுமக்கள் கடை அமைக்கப்படும் இடம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். நேற்று இரவும் அங்கேயே படுதாவில் கொட்டகை அமைத்து அதில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story