அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஆகியவை இணைந்து அமைப்பு சாரா தொழிளாலர்களுக்காக வருகிற 24–ந்தேதி காலை 10 மணிக்கு கடலாடி தாலுகா கன்னிராஜபுரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் தமிழ்நாடு ஓட்டுனர் தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் இதுவரை பதிவு பெறாத தொழிலாளர்கள் அனைவரும் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெறலாம். நல வாரியங்களில் உறுப்பினர்களாக சேர விரும்புபவர்கள் கொத்தனார், சித்தாள், தச்சர், பெயிண்டர், கல் உடைப்பவர், எலக்ட்ரீசியன், ஆட்டோ ஓட்டுனர், சுமை தூக்குபவர், தையல் தொழில் போன்ற அமைப்புச்சாரா தொழில்களில் ஈடுபட்டு இருக்க வேண்டும், மேலும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். திட்டங்களில் சேர்ந்து இருத்தல் கூடாது. அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினரான சேருவதற்கு பதிவு கட்டணம் ஏதும் இல்லை.
பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு பெற்ற கட்டுமான தொழிளாலர் பணியிடத்தில் ஏற்படும் விபத்தில் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து இழப்பீடாக வழங்கப்படுகிறது.
நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்ய விண்ணப்பிக்கும் நபர்கள் அசல் குடும்ப அட்டை மற்றும் நகல், பாஸ்போர்ட்டு அளவு போட்டோ– 3, ஓட்டுனர்களாக இருப்பின் ஓட்டுனர் உரிம அடையாள அட்டை மற்றும் நகல், ஆதார் அட்டை மற்றும் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு மற்றும் நகல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அதன் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருகிற 24–ந்தேதி முகாம் நடைபெறும் இடத்துக்கு வரவேண்டும். மேலும் சிறப்பு முகாமில் வாரிய உறுப்பினர்களின் பதிவு அடையாள அட்டைகள் பதிவு புதிப்பித்துக்கொள்ளாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்–கோர்ட்டு நீதிபதி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.